சனி, 27 நவம்பர், 2010

வீட்டுக் கடன் ஊழலுக்கும் 2 ஜி முறைகேட்டுக்கும் தொடர்பு!- அம்பலமாகும் உண்மைகள்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுக்கும், வீட்டு வசதிக் கடன் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. அம்பலப்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றவை பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே.

தொலைத்தொடர்பு துறைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லையே, எப்படி இந்த நிறுவனங்கள் புதிய தொழிலுக்கு வருகிறார்கள் என்று அப்போதே பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த 9 நிறுவனங்களும் தொடங்கப்பட்டு சில நாட்களே ஆகியிருந்தது முக்கியமானது. ஆனால் தொலைத் தொடர்பு லைசென்ஸ் பெற பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் காட்டி இருந்தன.

சில நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,600 கோடியைக் காட்டின. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை இந்த நிறுவனங்கள் எப்படி ஏற்பாடு செய்தன என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

இந் நிலையில் இந்த 9 நிறுவனங்களும் வீட்டு வசதிக் கடன் ஊழலிலும் சிக்கியுள்ளன. மெகா குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளன. முறைகேடாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசியிலிருந்து பெறப்பட்ட அந்த பணத்தை ஆதாரமாகக் காட்டித்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு உரிமையை இந்த நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த சிபிஐ உள்பட நாட்டின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மற்றும் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளன.

டி.பி.குரூப் என்ற கார்ப்பரேட் நிறுவனம், எடிசாலட் என்ற தொலை தொடர்பு நிறுவனத்தில் 45 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இது வீட்டுக் கடனுக்கு வாங்கப்பட்ட பணத்தில் பெற்றது என்று அம்பலமாகியுள்ளது.

அதுபோல ஸ்வான் டெலிகாம் நிறுவன நிதி பரிவர்த்தனைகளிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2007ல் டெலிகாம் உரிமத்துக்கு விண்ணப்பித்தது இந்த நிறுவனம். 2008ல் உரிமம் கிடைத்தது. அதன்பிறகு 4 முறை இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த மணி மேட்டர்ஸ் நிறுவனம் இடைத் தரகர் போல செயல்பட்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமை பெற, பல நூறு கோடி ரூபாய்க்கு வீட்டு வசதிக் கடன்களை பெற்றுக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு வங்கிகளில் பல ஆயிரம் கோடியை முறைகேடான வழியில் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதை தாற்காலிகமாக கணக்கில் காட்டி 2 ஜி உரிமம் வாங்கியுள்ளன. இந்த முறைகேட்டின் அளவு ரூ. 45,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறாம்.

வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா:

இதற்கிடையே எல்.ஐ.சி. வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுக் கடன் வழங்குவதில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழலில் எல்ஐசி வீட்டுக்கடன் நிறுவனத்தின் தலைவர் நாயருக்கும் பங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாயர் கைது செய்யப்பட்டார். இப்போது அவருக்கு பதில் எல்.ஐ.சி., வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: