ஞாயிறு, 7 நவம்பர், 2010

டில்லியில் ஒபாமா ; பிரதமர் மன்மோகன் வரவேற்றார்; இரவில் சிங் விருந்தளிப்பு

Top newsமும்பை: இந்தியாவிற்கு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 2 ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ( 7ம் தேதி) பள்ளிக்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். பின்னர் பல்வேறு நிகழச்சிகளை முடித்து மாலை 3. 30 மணியளவில் டில்லி வந்தார். விமானத்தில் வந்திறங்கிய ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் அவரது மனைவி குல்சரன்கவுர் வரவேற்றனர்.
இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையம் வந்ததும் பிரதமரும் , ஒபாமாவும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கைக்குலுக்கியும் நட்பு பரிமாறி்க்கொண்டனர். இரவில் பிரதமர் மன்மோகன்சிங் ஒபாமாவுக்கு விருந்தளிக்கிறார்.  டில்லி வந்த ஒபாமாவும் அவரது மனைவியும் ஹூமாயுன் கல்லறைக்கும்  சென்றனர். ஒபாமா, அங்கிருந்த குழந்தைகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று இரவு பிரதமர் விருந்து அளிக்கும் முன்பு பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒபாமா  இருவரும் தனியாக பேச்சுவார்‌த்தை நடத்த உள்ளதாகவும், இது ஏற்கனவே திட்டமிடப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்கள் நடக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இந்தியா வந்த ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டல் சென்றார். அங்கு பயங்கரவாதத்தை சந்தித்து மீண்டும் புத்துயிர் பெற்று திகழ்வதாக மும்பை மக்களை பாராட்டி பேசினார். தொடர்ந்து வர்த்தக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசினார்.
 
பள்ளிக்குழந்தைகளுடன் குஷி ஆட்டம் : இன்று காலையில் மும்பையில் உள்ள ஹோலி நேம் பள்ளிக்குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார். இங்கு தீபம் ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இதனையடுத்து பள்ளிக்குழந்கைளின் பரதநாட்டியம், தியா டான்ஸ், ஹோலி ஆட்டம், மற்றும் மீனவ மக்களின் பாரம்பரிய ஆட்டம் என பல வகையாக ஆட்ட நிகழ்ச்சி நடந்தது.
ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்த ஒபாமாவும் அவரது மனைவியும் எழுந்து குழந்தைகளுடன் ஆடத்துவங்கினர்.குழந்தைகளும் ஒபாமாவுடன் கை கொடுத்து ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர். கடந்த ஆண்டில் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடித்தக்கது.
ஒபாமாவுக்கு நினைவு பரிசு: பள்ளிக்குழந்தைகள் ஒபாமாவுக்கு ( ஹேப்பி தீபாவளி மிஸ்டர் ஒபாமா ) தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லினர். தொடர்ந்து அவருக்கு மாணவர்கள் ஒரு நினைவு பரிசு வழங்கினர். இந்த பொருள் உலக வெப்பமயமாதலை தடுக்கும் கருத்தினை சொல்லும் விதமாக அமைந்திருந்தது.
இது குறித்து ஒபாமாவுடன் ஆடிய ஒரு மாணவன் கூறுகையில் , அதிபர் ஒபாமா , மற்றும் அவரது மனைவியுடன் நான் ஆடியது மிக மகிழ்ச்சியாகவும் , உற்சாகமாகவும் இருக்கிறது. உலக அளவில் வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவருக்கு நினைவு பரிசு ஒன்று வழங்கினோம் என்றார்.
தொடர்ந்து ஒபாமா , செயின்ட் சேவியர் கல்லூரியில் நடக்கும் விழாவில் பங்கேற்றார். இதனையடுத்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கிராம மக்கள் , விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள் இடையே ஒபாமா பேச்சு : இந்தியா வளர்ந்து வரும் நாடு அல்ல. ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடாகி விட்டது. உலக நாடுகளில் அபார சக்தி படைத்த நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது. என அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார் . அவர் மேலும் பேசுகையில்; இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு எல்லையில்லாதது. இந்த உறவு 21-ம் நூற்றாண்டில் மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் உதவும் வகையில் உள்ளது.

நாளை பிரதமரை சந்திக்க உள்ளேன். அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பில் பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவிகரமாக திகழ முடியும்.
தீவிரவாதம் நமக்கு சவாலாக அமைந்து உள்ளது. தீவிரவாதிகளை நாம் தனிமைப்படுத்த வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் . எந்த மதமாக இருந்தாலும் அமைதியையே போதிக்கின்றன. இவ்வாறு ஒபாமா பேசினார்.

கருத்துகள் இல்லை: