சனி, 6 நவம்பர், 2010

தங்கபாலுவை மாற்ற முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி கே.எஸ்.அழகிரி-வசந்தகுமார் முயற்சி

தங்கபாலுவை மாற்ற முடிவு:
 
 தமிழக காங்கிரஸ் தலைவர்
 
 பதவிக்கு கடும் போட்டி
 
 கே.எஸ்.அழகிரி-வசந்தகுமார் முயற்சிசென்னை, நவ. 6-
 
தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலுவை மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக மேடைகளில் பேசி வரும் நிலையில் தங்கபாலு மாற்றப்படுவாரா? இல்லையா? என்ற கேள்வி சில மாதங்களாக நீடித்து வருகிறது. வர இருக்கிற சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
மத்திய மந்திரி ஜி.கே.வாசனை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க மேலிடத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவி தனக்கு இப்போது வேண்டாம் என வாசன் கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இதனால் தங்கபாலு தலைவர் பதவியை மீண்டும் தக்கவைத்து கொள்ள மேலிடத்தில் முயற்சி எடுத்துள்ளார்.
 
இதையறிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனக்கு மீண்டும் தலைவர் பதவி வேண்டும் என டெல்லியில் வற்புறுத்தி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 
தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதால் யாரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிப்பது? அல்லது எந்த கோஷ்டியின் ஆதரவாளரை நியமிப்பது என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.
 
இதனால் வாசன் அணியில் ஞானதேசிகன் எம்.பி., ப.சிதம்பரத்தின் அணியில் கே.எஸ்.அழகிரி எம்.பி., விசுவநாதன் எம்.பி. ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சி செய்கின்றனர்.
 
இதையறிந்த வசந்தகுமார் எம்.எல்.ஏ.வும் தமிழக காங்கிரஸ் பதவிக்கு முயற்சி செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் முடிந்த பிறகும் வசந்தகுமார் 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து பேசி வந்துள்ளார்.
 
பீகார் தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் இருக்கும் என்றும் வரும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
                                                                            

கருத்துகள் இல்லை: