செவ்வாய், 30 நவம்பர், 2010

ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.
குஜராத் துவங்கி கோவை வரை.................
இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது.
ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவதில்லை.
இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப்புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்
இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது.
இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்லஎன்றார்*.
பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதேஎன்று கோபப்பட்டிருப்பார்.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தான் பதிவாகிறது. பதிவானவைகள் தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ?
காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.
யாருக்காக? எதற்காக?
கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.
அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.
மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.
ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரணமாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது.
இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும்.
மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது.
இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.
பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.
குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006
ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.

1998
பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள்.
மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர்.
இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது.
ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.
என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.
அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது.
ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன.
சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை.
அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.
கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார்.
ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் துவக்கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது.
இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார்
பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’
அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளதுஎன்று கூறுகிறார்.
அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.
அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

கருத்துகள் இல்லை: