செவ்வாய், 30 நவம்பர், 2010

தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனைதமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.
 
இதையொட்டி தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலை எவ்வாறு நடத்து வது என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்க மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக இன்று சென்னை கோட்டையில் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
 
மத்திய தேர்தல் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்டி ரெட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோ சனை நடத்தி சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டு அறிந்தனர்.
 
ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் அதிகாரியை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அனைத்துக் கட்சியினரும் தனித்தனியாக சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
 
முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மகேந்திர வர்மன், கல்யாணசுந்தரம், தமிழ்மதி ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து கூறினார்கள். அடுத்து பாரதீய ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமலைசாமி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை ஒரேநாளில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாக பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
 
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராஜ்மோகன், வீரபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்ட னர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் வக்கீல் ராஜ்மோகன், புரசை கீதா பங்கேற்றனர்.
 
கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் “அனைவருக்கும் வாக்காளர் அட்டை கொடுக்க வேண்டும். எந்திரத்தில் ஓட்டு போடும் போது யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கான அத்தாட்சி வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிருபர்களிடம் கூறினார்கள்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார்கள்.
 
தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது தி.மு.க. சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
 
அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நேர்மையான தேர்தல் ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது போன்ற பல்வேறு கருத்துக்களை வற்பறுத்தினார்கள்.
 
பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி வேலு, முத்துக்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். அப்போது எந்திர ஓட்டுப்பதிவை நேர்மையாக நடத்து வது, பண வினியோகத்தை தடுத்தல் போன்ற கருத்துக் களை தெரிவித்தனர்.
 
தேர்தல் அதிகாரியுடன் அனைத்துக்கட்சி பிரமுகர் களின் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.

கருத்துகள் இல்லை: