செவ்வாய், 7 டிசம்பர், 2010

ரூ.1.76 லட்சம் கோடி ஊழலை நம்புவதா? - கருணாநிதி

பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
''அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்'' என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான். ''பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்''- என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ''பல்லுக்குப் பல் இருகாதம்'' என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு ''பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்'' என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை: