செவ்வாய், 7 டிசம்பர், 2010

தமிழகத்தில் தலித் முதல்வராவார்: ப.சி. நம்பிக்கை!

தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் கொட்டும் மழையிலும் திரண்டிருந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு நாள். அன்று நாடாளுமன்ற கூட்டம் நடக்கிறது. அன்று நான் கூட்டத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது. நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு தொடங்கி 11-05 மணிக்கு முடிந்தாலும், முடியாவிட்டாலும் நான் சென்னையில் இருக்க முடியாது.
தலித் மக்கள் விடுதலைக்காக உரிமைக்காக அம்பேத்கர் போல யாரும் பாடுபடவில்லை. மகாத்மா காந்தி தீண்டாமை ஒழிந்துவிட்டது என்று கூறினார். ஆனால் தீண்டாமை ஒழியவில்லை என்று அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
தீண்டாமை கிராமத்தில் மட்டுமல்ல நகர்ப்புறத்திலும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை தம்பளர் முறை இன்னும் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் நேற்றைய தலைமுறைக்கு தலைவர்களை அடையாளம் காட்டியதுபோல இன்றைய தலைமுறைக்கு சோனியாகாந்தியை அடையாளம் காட்டியதுபோல அடுத்த தலைமுறைக்கு ராகுல் காந்தியை அடையாளம் காட்டியுள்ளோம். அவரது அறிவுரையை ஏற்று ஏராளமான இளைஞர்கள் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் படித்த இளைஞர்கள் அதிகமான பேர் சேரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டிய காலம் வந்துவிட்டது. கட்சியில் மட்டும் அல்ல ஆட்சியிலும் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் காலம் வந்துவிட்டது. இந்த கருத்தை நான் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன்.
அம்பேத்கருக்கு கல்விதான் மிகப்பெரிய தகுதியை தந்தது. இது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். ஆகவே கல்வியை புறக்கணிக்காதீர்கள். கல்வித்தகுதியை பெற்று இந்த கட்சியில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வாருங்கள். கட்சி பொறுப்பை ஏற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வாருங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் கக்கனை உள்துறை அமைச்சராக ஆக்கியது. இந்தியாவில் எந்த கட்சியாவது தலித் மக்களை உள்துறை அமைச்சராக ஆக்கி இருக்கிறதா?
நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைக்காமல் போகாது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பு வரும் நேரத்திலே தலித் ஒருவர் உள்துறை அமைச்சராக வருவார். தலித் ஒருவர் நிதி அமைச்சராக வருவார். தலித் ஒருவர் தமிழ்நாட்டிலே முதல்வராகவும் வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
  
கல்வி நமக்கு மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தை கையிலே ஏந்தி, கட்சியில் ஆட்சியில் பொறுப்புகளை ஏற்று தீண்டாமை வன்கொடுமை என்று அனைத்து கொடுமைகளையும் ஒழித்து இந்தியாவிலே அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குங்கள்," என்றார் ப.சிதம்பரம்.

கருத்துகள் இல்லை: