வியாழன், 2 டிசம்பர், 2010

2ஜி வருவாய் இழப்பு உத்தேசமானதே : ஆ. ராசா!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளால், மத்திய அரசிற்கு ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது மண்டையைக் குழப்பும்  தொகை என்றும் உத்தேசமான தொகையே என்றும் தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா கூறியள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ நடத்திவரும் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் முன் ஆ.இராசா சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா இவ்வாறு கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேடுகளால், மத்திய அரசிற்கு மண்டையைக் குழப்பும் ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது உத்தேசமானது என்றும், அது நீதிமன்ற ஆய்வுக்கு நிற்காது என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

தலைமை தணிக்கை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் விசாரணையில் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்கமாக மதிப்புகளைக் கணக்கிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை தலைமைக் கணக்கு அதிகாரியின் தன்னுடைய தணிக்கையின்போது கடைப்பிடிக்கவில்லை என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒதுக்கீடுகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். ஆ. ராசா மே 16, 2007ஆம் ஆண்டுதான் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னர் இத்துறை அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறன் மற்றும் அருண் ஷோரி ஆகியோர் கடைப்பிடித்த வழிமுறைகளையே ஆ. ராசா கடைப்பிடித்தார். ஆ. ராசாவுக்கு முன்னர் பதவியில் இருந்த இருவரும் 53 உரிமங்களை வழங்கியுள்ளனர் என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: