பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் சாதாரண தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்.டி.டி. வசதியில் புதிய சலுகையை புதன்கிழமை (டிசம்பர் 1) முதல் அமல் செய்கிறது.
சாதாரணத் தொலைபேசி வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் நாட்டில் எந்த ஊரிலும் உள்ள வேறொரு சாதாரண தொலைபேசிக்கு எஸ்.டி.டி. மூலம் தொடர்பு கொண்டால் மூன்று நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்ற அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும். எந்த நிறுவனத்தின் சாதாரண தொலைபேசியாக இருந்தாலும் இதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர் பயன்படுத்தும் தொலைபேசி கட்டண திட்டத்துக்கு ஏற்ப இது ரூ.1 அல்லது ரூ.1.20 ஆக இருக்கும்.
இப்போது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்று அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. புதிய சலுகையால் பி.எஸ்.என்.எல். சாதாரண தொலைபேசி வாடிக்கையாளருக்கு எஸ்.டி.டி. வசதியில் 50 சதவீதம் கூடுதல் சலுகை கிடைக்கிறது.
தொலைபேசித் துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். சாதாரணத் தொலைபேசியை திரும்ப ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக நிறைய திட்டங்களை அந் நிறுவனம் அளித்து வருகிறது.
சென்னையில் சாதாரணத் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர் விரும்பினால் அதே கடைசி 5 அல்லது 4 எண்களைக் கொண்ட பி.எஸ்.என்.எல். செல்போன் சிம் கார்டு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் பெருமளவு சரிந்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். கூடுதல் சலுகைத் திட்டத்தை இப்போது அறிவித்துள்ளது.
நாட்டில் 3.51 கோடி சாதாரண தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல். மூலம் இயங்குகின்றன. தொலைபேசி வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
இத் துறையின் வருவாயில் 92 சதவீதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குதான் கிடைக்கிறது. 602 மாவட்டங்களில், 7330 நகரங்கள், 5.6 லட்சம் கிராமங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி மூலமாக இணைக்கிறது. - தினமணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக