புதன், 1 டிசம்பர், 2010

ஒரே நாளில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல்-கட்சிகள் கோரிக்கை!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பல கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று சென்னையில் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இன்று காலை திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது கட்சிகளின் பிரதநிதிகளுடன் தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் ஜே.பி.பிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்ட்டிரட்டா ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில் நடந்தது.

பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமலைசாமி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராஜ்மோகன், வீரபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்க வேண்டும். வாக்கு எந்திரத்தில் ஓட்டு போடும்போது யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கான அத்தாட்சி தரப்பட வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.

திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி, கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று அளிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று வற்பறுத்தினர்.

பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, முத்துக்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து ஓட்டு வாங்க பணம் வினியோகத்தை தடுக்க வேண்டும் என்று கோரினர்.

பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றும், இதன்மூலம் கள்ள ஓட்டைத் தடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை: