ஞாயிறு, 5 டிசம்பர், 2010

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்-தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

சென்னை: நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தூதரகங்கள், மதம் சார்ந்த கட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து ஹோட்டல்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களான கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலே ரயில் நிலயத்திற்கு வரும் பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும் கடும் சோதனை செய்யப்படுகிறது.

இது குறி்தது ரயில்வே போலீஸ் எஸ்.பி. மவுரியா நிருபர்களிடம் கூறியதாவது,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார், சிறப்பு காவல்படை போலீசார் 2,500 பேரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.) 1,000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தண்டாவளங்களை கண்காணிக்க 65 மோட்டார் சைக்கிள்களி்ல போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். மேலும், 40 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 33 ரயில் நிலையங்களி்ல வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வர்.

இன்றும், நாளையும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் வைத்திருபவர்கள் மட்டும் தான் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் பணி புரிபவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே செல்லலாம் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: