சென்னை: கர்நாடகத்தில் நடந்திருப்பதைப் போல ஒரு மிகப் பெரிய நில மோசடி தமிழகத்திலும் நடந்திருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது. நிலமற்றவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலம், நீதிபதிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சகட்டுமேனிக்கு அளிக்கப்பட்டுள்ளதை இந்த ஆர்.டி.ஐ. தகவல் அம்பலப்படுத்தியுள்ளது.
அரசு ஒதுக்கீட்டுச் சலுகையைப் பயன்படுத்தி இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுக் கணக்கு இது. இந்த ஒதுக்கீட்டில் 40 சதவீதம், 2008ம் ஆண்டில் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
தமிழக நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வீடோ இல்லாதவர்களுக்கே வீட்டு வசதி வாரியம் நகர்ப்புறங்களில் இடங்களை கொடுப்பதில் முன்னுரிமை தர வேண்டும் என்பது கொள்கையாகவே உள்ளது. இதன் முக்கிய நோக்கமே, சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாதவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக ஒதுக்கீடுகள் இருப்பதை ஆர்டிஐ மூலம், அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளார் வி.கோபாலகிருஷ்ணன்.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்குவதாக இருந்தாலும் கூட அதை வாங்குவோருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ வீட்டு வசதி வாரியத்தின் எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிகளில் சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் திருவான்மியூர், முகப்பேர் பகுதிகளில் இந்த அரசு ஒதுக்கீட்டின் கீழ் பெருமளவிலான நிலங்கள் பெரும் பணக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மார்க்கெட் மதிப்பை விட 40 முதல் 60 சதவீத அளவுக்கு விலை குறைத்து இடம் அல்லது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தைப் பெற்றவர்களில் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் அடக்கம். மேலும் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், முன்னாள் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் இதுபோல முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக