2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு இழப்பும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும். பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்கு இன்னும் 55 நாட்களே உள்ளன.
இந்த 55 நாட்களுக்குள் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடிக்க வேண்டும். ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி, சென்னை, பெரம்பலூரில் 2 தடவை அதிரடி சோதனை நடத்தினார்கள். கடந்த புதன் கிழமை டெல்லியிலும், தமிழ் நாட்டிலும் ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
2 தடவை நடந்த சோதனைகளில் ஏராளமான கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள், பென் டிரைவ்கள், டைரிகள், பேப்பர் ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கின. குறிப்பாக தரகர் நீரா ராடியா, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் ஆகிய இருவரின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து சுமார் 15 கம்ப்யூட்டர்கள், நூற்றுக்கணக்கான பென் டிரைவ்கள் கிடைத்தன.
அவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஏராளமான தகவல்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த தகவல்கள் அனைத்தும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தகவல்களாக இருக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
நீரா ராடியாவின் கம்ப்யூட்டர்கள், பென் டிரைவ்களில் அழிக்கப்பட்ட தகவல்கள் என்னென்ன என்பதை கண்டு பிடிக்க அவை அனைத்தும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளை சோதனையிட்டு, அதன் மூலம் ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை பெற முடியும். எனவே தடய வியல் சோதனைக்குப் பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான பல புதிய தகவல்கள் சி.பி.ஐ. வசம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் உண்மையில் நடந் தது என்ன? ஹவாலா மோசடி நடந்ததா? யார்-யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? எவ்வளவு பணம் முறை கேடு நடந்துள்ளது? ஆகிய கேள்விகளுக்கு நீரா ராடியாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் பதில் கிடைக்க உள்ளது.
நீரா ராடியா வீட்டில் கிடைத்த கம்ப்யூட்டர்கள் பென் டிரைவ்கள் மற்றும் ஹவாலா பண பரிமாற்றம் செய்து கொடுக்கும் தரகர்கள் மகேஷ்ஜெயின், அசோக் ஜெயின் ஆகியோர் வீடுகளில் சிக்கிய கம்ப்யூட்டர்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய ஆதாரங்களாக கருதப் படுகின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
நீரா ராடியாவிடம் அதிரடி விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு தடவை நீரா ராடியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அதன் அடிப்படையில் நீரா ராடி யாவிடம் பதில் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. நீரா ராடியாவிடம் தீவிர விசாரணையை தொடங்குவதற்கு முன்பு டிராய் அதிகாரிகள், ஹவாலா தரகர்களிடம் விசாரணையை நடத்தி முடித்து விட சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் தனிச் செயலாளராக இருந்த சந்தோலியா, தொலை தொடர்புத்துறை அதிகாரி ஸ்ரீவத்சவா ஆகிய இருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அசோக் ஜெயினிடமும் சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணத்தை இவர்கள் இரு வரும் ஹவாலா மூலம் உரியவர்களுக்கு சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயின் சகோதரர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஆவணங்களில் இருந்து இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அசோக் ஜெயின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தான் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணத்தை பல கோடிகளாக பிரித்து பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரை தனி இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த விசாரணை தகவல்கள் அடிப்படையில் அடுத்த வாரத் தொடக்கத்தில் நீரா ராடியாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் சில ஆவணங்கள் தமிழ்மொழியில் உள்ளன. எனவே தமிழ் தெரிந்த அதிகாரிகள் உதவியுடன் அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த ஆய்விலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது இது வரை இல்லாத அளவுக்கு பர பரப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக