சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கும்போது அக்கட்சியை, அதிமுக கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனராம்.
நடிகர் விஜய் அரசியலில் குதிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து சென்னை வட பழனியில் உள்ள தனக்குச் சொந்தமான ஜே.எஸ். கல்யாண மண்டபத்தில் வைத்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்
அப்போது ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களைக் கேட்டுள்ளார். ரசிகர்களும் கண்டிப்பாக அரசியலில் குதிக்கலாம். புதுக் கட்சி தொடங்க இதுதான் சரியான நேரம் என்று விஜய்யிடம் கூறினார்களாம்.
மேலும் புதிய கட்சி தொடங்குவதை பொங்கலுக்கு முன்பே செய்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு நமது பலத்தை பரீட்சித்துப் பார்க்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெரும்பாலான நிர்வாகிகள், புதிய கட்சி தொடங்கிய பி்ன்னர் நாம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்களாம். இதைக் கேட்டு சற்று புருவம் உயர்த்தினாராம் விஜய். முதலி்ல நமது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசுங்கள், பிறகு கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்று கூறினாராம்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே அரசியலில் புகலாம் என்று ஏகோபித்த குரலில் கூறியதால் சரி என்ற ரீதியில் பேசி அவர்களை அனுப்பி வைத்துள்ளாராம் விஜய். அனேகமாக பொங்கலுக்கு முன்பாகவே தனது கட்சி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த சமீபத்திய படங்கள் வரிசையாக பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. நிலையான நடிகராக இன்னும் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல் உள்ளார். இந்த நிலையில் அவரை அரசியல் தலைவர் என்ற புதிய கோணத்தில் தமிழக மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக