திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பூசலை உண்டாக்கி கூட்டணியைத் துண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஊடங்கள் செயல்படுவதாகவும் அவர்களது எண்ணம் நிறைவேறாது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அண்மையில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது உரையின் ஒரு பகுதியை மறைத்து சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பேச்சின் முதல் பகுதியை சில பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டு, இரண்டாவது முக்கியமான பகுதியை அப்படியே மறைத்துள்ளன என்று கருணாநிதி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் கூட்டணிக்குத் திமுக தலைமை வகிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் சில விஷமிகளின் தூண்டுதலின் பேரில், திமுக உடனான உறவை கெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த உறவை துண்டித்தால், துண்டிக்கின்றவர்களுக்கும் துண்டிக்கப்படுகின்றவர்களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம். இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள் என்று பேசியிருந்தேன்.
ஆனால் இந்த பேச்சின் பின் பகுதியை மறைத்துவிட்டு, காங்கிரசுக்குத்தான் இழப்பு என்று பேசியதைப்போல இரண்டு கட்சிகளுக்குமிடையே பூசலை உண்டாக்க எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் நிறைவேறாது.
ஏழை - எளிய மக்களுக்காக காங்கிரீட் வீடுகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 108 அவசர சிகிக்சை ஊர்தித் திட்டம், புதிய தலைமைச் செயலக வளாகம், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப் பூங்கா ஆகிய சாதனைகளையெல்லாம் ஒரு சில பத்திரிகையாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக