வியாழன், 16 டிசம்பர், 2010

அரசு நிறுவனங்கள் ஊழலற்றதாக, சிறந்த தரத்துடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங்














அரசு நிறுவனங்கள் ஊழலற்றதாக, சிறந்த தரத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விருது வழங்கினார் பிரதமர். இவ்விழாவில் அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பிரதமர் பேசியது : பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் வலிமையுடன் திகழ்வதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம், அரசுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு உயர் தரத்துடனும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். உலக அளவில் அரசுத் துறை நிறுவனங்களுக்கென்று விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுவதோடு வெளிப்படையான, சிறந்த நிர்வாகமும் பொதுத்துறை நிறுவனங்களில் அவசியம் இருக்க வேண்டும்.
உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் என்ற நடைமுறை மூலம் சிறப்பான நிர்வாகம் நடைபெறுவதோடு உற்பத்தியும் பெருகும். தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் இத்தகைய நடைமுறை மிகவும் அவசியமானது என்றார் பிரதமர்.
அரசுத் துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் ஆகியன சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இவ்விரு நிறுவனங்களும் தனியார் துறையின் கடும் போட்டியை சமாளிக்கவேண்டிய நிலையில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.
""சர்வதேச அளவில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. சர்வதேச அளவிலான வாய்ப்புகளையும் அரசு நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இப்போதைய சூழலில் மூலப் பொருள்களை அதிகம் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் அரசுத் துறை நிறுவனங்களுக்கான கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும். இப்புதிய கொள்கை அடுத்த இரு வாரங்களில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பப்படும்,'' என்று பொதுத்துறை நிறுவனங்களின் செயலர் பாஸ்கர் சாட்டர்ஜி தெரிவித்தார்.
எண்ணெய், நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட தொழில்துறைகளிடமிருந்து இது தொடர்பான ஆலோசனைகள் வந்துள்ளன. இவை அனைத்தும் அமைச்சரவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: