வியாழன், 2 டிசம்பர், 2010

முஷாரப் இந்தியா வர விசா மறுப்பு: மத்திய அரசு அதிரடி

டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வர மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

சமீபத்தி்ல் அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் இந்தியாதான் இனப் பிரச்சனைகளைத் தூண்டி விடுகிறது, இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறியிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந் நிலையில் டெல்லியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளவதற்காக முஷாரப், இந்தியா வர விசா கோரியிருந்தார்.

இப்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துவிட்ட முஷாரபின் சார்பில், அவரது ஆதரவாளர்கள் சிலர் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர் சார்பில் விசா கோரி விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், அவரது சமீபத்திய பேச்சுகளால் அதிருப்தியில் உள்ள மத்திய அரசு அவருக்கு விசா அளிக்க மறுத்துவிட்டது.

முஷாரபுக்கு விசா தர வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து அது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது.

மேலும் இப்போது பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ளவர்களும் முஷாரபுக்கு எதிரானவர்கள் என்பதால் அவருக்கு விசா வழங்குவதால் பாகிஸ்தானுடனான உறவு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறையும் கருதியது.

உள்துறை மற்றும் வெளியுறவுத்துறையினரின் கருத்தை ஏற்ற பிரதமர் அலுவலகம் முஷாரபுக்கு விசா வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை: