வியாழன், 2 டிசம்பர், 2010

கொள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நடிகர்கள்!-அன்புமணி

சேலம்: நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது, எதற்கு கட்சி தொடங்குகிறோம் என்றும் தெரியாது, என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசுகையில், "தமிழகத்தை எந்த கொள்கையும் இல்லாத திரைத் துறையைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். 43 வருடமாக சினிமாக்காரர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆள சினிமாதான் தகுதியா... சினிமாவை வைத்துதான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இன்று வந்த நடிகர்கள் எல்லாம் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள். அந்த நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் இவர்கள்? மக்களுக்காக போராடினார்களா... சிறைக்கு சென்றார்களா.... ஒரு கிராமத்தையாவது எட்டி பார்த்திருப்பார்களா...?

நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது. எதற்கு கட்சி தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஆனால் கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி பாமகதான். தமிழகத்தில் சீரான இலவச கல்வி வழங்க பாமக தொடர்ந்து பாடுபடும்," என்றார்.

சிறிது காலம் நடிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸும், அவர் மகன் அன்புமணியும் மீண்டும் தீவிரமாக நடிகர்களைத் தாக்கிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி உறுதி என்று செய்திகள் வெளியாகும் நிலையில், பாமகவின் இந்த தாக்குதல் பேச்சு கவனிக்கத்தக்கது.

பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடிப் பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.

பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை: