டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை ராஜாவுக்கும் சேர்த்தே வாதாடி வந்த மத்திய அரசு முதல் முறையாக ராஜாவைக் கைவிட்டுள்ளது. பிரதமர் கூறிய அறிவுரைகளை ராஜா மதிக்கவே இல்லை என்று இன்று உச்சநீதின்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை சம்பாதித்து வருகிறது மத்திய அரசு. முதலில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை சந்தித்தது. தற்போது கடந்த 2 வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை அவசியம் என்று கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.
பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறந்து பேசாமலேயே உள்ளார். ஆனால் ராஜாவைக் கைவிடாமல் தொடர்ந்து அவருக்கும் சேர்த்தே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வாதாடி வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கூட முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுவது போல நடந்து கொண்டார். இதையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதிரடி அந்தர் பல்டியாக ராஜாவை கீழே தூக்கிப் போட்டுள்ளது. மொத்தப் பழியையும் தற்போது ராஜா மீது திருப்பும் வகையில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் சில கருத்துக்களை வைத்திருந்தனர். அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் (ராஜா) உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் அறிவுரைகளை தொலைத் தொடர்பு அமைச்சர் பின்பற்றவில்லை. மதிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத்துறை மிகவும் வெளிப்படையான துறையாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமருக்காக முதலில் கோபால் சுப்ரமணியம்தான் ஆஜராகி வந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அரசு, அட்டர்னி ஜெனரலை இதில் இறக்கியது. தற்போது தொலைத் தொடர்புத் துறைக்காக ஆஜராகி வருகிறார் கோபால் சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாவை அம்போ என கைவிடும் வகையில் கோபால் சுப்ரமணியம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக