2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகு இந்தத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பா.ஜ.க வின் அருண் ஜெட்லி, "நாங்கள் செய்த பிழைகளுடன் இன்றைய ஊழலை ஒப்பிடக்கூடாது" என்றார்.
அருண் ஜேட்லி மேலும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போது,
"2007, 2008-ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்களால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது கறை படிந்திருக்கிறது. இந்தக் கறையை மறைப்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிட சிலர் முயற்சிக்கிறார்கள். உண்மையில், தற்போதைய தொலைத் தொடர்பு பரவலை எட்டுவதற்கு அடித்தளம் அமைத்ததற்காக பாஜக ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சர்களுக்கு மத்திய அரசு நன்றி தெரிவிக்க வேண்டும். மேற்குவங்கம், பிகார், ஒரிசா, வடமேற்கு மாநிலங்களுக்கான தொலைத் தொடர்பு உரிமம் பெறுவதற்கு அப்போது யாரும் முன்வராத காரணத்தினாலேயே வருவாயைப் பங்கிடும் வகையிலான தொலைத்தொடர்புக் கொள்கையைப் பாஜக அரசு கொண்டுவந்தது.
ஆனால், 2007-ல் இந்த முறையைப் பயன்படுத்தி மோசடி நடந்திருக்கிறது. 41 நிமிடங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன. 2001 விலையில் 2007-ம் ஆண்டில் அலைக்கற்றை வழங்குவதை டிராய், அப்போதைய நிதித்துறை செயலர் சுப்பா ராவ், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோர் எதிர்த்திருக்கின்றனர். ஆனால், அந்த எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன. நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் வழங்கியதை, ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் பிரதமர் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவோம் என வாதிடுவது தவறானது." என்று அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக