புதன், 2 மார்ச், 2011

தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க குலாம் நபி ஆசாத் வருகிறார்

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நிலவி வரும் சிக்கலைத் தீர்த்து சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். நாளை அவர் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார்.

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி போட்டு வரும் நிபந்தனைகளுக்கு திமுக உடன்பட மறுத்து விட்டது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி காங்கிரஸுக்கு 66 சீட்கள் வரை தர திமுக தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், ஆட்சியில் பங்கு கேட்கக் கூடாது என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம்.

இதனால் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டைநிலவுகிறது. இந்த நிலையி்ல நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு உறுப்பினர்கள் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினர்.

அப்போது இந்தப் பிரச்சினையை தன்னிடம் விட்டு விடுமாறும் மேலிடமே நேரடியாக திமுகவுடன் பேசிக் கொள்ளும் என்று சோனியா கூறியதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தங்கபாலுவும், சோனியா காந்தியே அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாபம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் அவர் நாளை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது சுமூகத் தீர்வு எட்டப்பட்டு தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளையுடன் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: