சனி, 5 மார்ச், 2011

அ.தி.மு.க - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.
 
ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கூட்டணி குறித்து அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திடீரென்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசும் சென்றார். அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை 20 நிமிடம் நடைபெற்றது. பேசசுவார்த்தையின் போது, அ.தி.மு.க.வும் தே.மு.தி.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
 
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் விரைவில் பேசி முடிவு செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை: