தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே விரைவில் உடன்பாடு எட்டப் படும் எனத் தெரிகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள் வரை ஒதுக்கக் கூடும் என்றும் உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு முறை தமிழக வந்து பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்து பேச்சு வார்த்தை விவரங்களைத் தெரிவித்தது. சோனியாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அடுத்த பேச்சுவார்த்தை டெல்லியிலா அல்லது தமிழ்நாட்டிலா என்பதை சோனியா முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு குறித்த காங்கிரசின் கோரிக்கை காரணமாகவே உடன்பாடு எட்டப் படுவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப் படும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக