வெள்ளி, 4 மார்ச், 2011

தேர்தல் வாக்குறுதி - இலவச கணினி!

"தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும்  மக்களுக்கு விருப்பம் இருந்தால் கணினியே வழங்கப்படும்" என்று புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி  ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கூடுதல் சுழல் நிதி வழங்குதல் மற்றும் பாரத் நிர்மாண் ராஜீவ்காந்தி சேவக் கேந்திரா அடிக்கல் நாட்டு விழா புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மகளிர் குழுக்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 1509 குழுக்களுக்கு ரூ.73 லட்சம் சுழல் நிதி வழங்கினார்.

மேலும் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 4 பாரத் நிர்மாண் ராஜீவ்காந்தி சேவக் கேந்திரா கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மத்திய அமைச்சர் நாரயணசாமி பேசிய போது,   "தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் டி.வி. வழங்கவேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு விருப்பம் இருந்தால் கணினியே வழங்கப்படும். மகளிர் வருமானத்தைப் பெருக்கவே அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வெளி மாநிலங்களில் பெண்கள் ஒருங்கிணைந்து நூற்பாலை, பஞ்சாலை, பெரிய மளிகை கடை ஆகியவற்றை நடத்துகின்றனர்.

அதுபோல் புதுவையில் உள்ள சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஒரு ஒன்றியத்தை நிறுவி பெரிய அளவிலான தொழிலைச் செய்ய வேண்டும். கடன் தர வங்கிகள் உள்ளது. வங்கிக்  கடனைப் பெற்று வட்டிக்கு விடுவதால் மகளிர் வளர்ச்சி அடைய முடியாது. தொழில் செய்தால் மட்டுமே உயர முடியும். இங்கு தயாரிக்கப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் மகளிருக்குச் சிரமம் இருக்கிறது. அதைப்போக்க, அரசு மூலம் விற்பனை மையம் அமைத்து அதன் மூலம் பொருட்களைச் சந்தைப்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயணசுவாமி பேசினார்.

கருத்துகள் இல்லை: