இந்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி நியமனத்தை உச்சக நீதிமன்றம் கண்டனம் செய்ட்தது நடுவண் அரசுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பி.ஜே . தாமஸ் நியமனம் சட்ட விரோதமானது என்றும், இவர் நியமனத்தில் சட்டமீறல்கள் நடந்திருப்பதோடு மேல்மட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றும், இந்தப் பொறுப்பில் அவர் நீடிக்க தகுதி இல்லையென்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நான் பதவி விலக மாட்டேன் என்று கூறி வந்த தாமஸ் இன்று காலையில் அவசரம் அவசரமாக பதவி விலகல் செய்துள்ளார்.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து வரும் பி.ஜே. தாமஸ் கேரளாவில் உணவு துறை செயலராக இருந்தபோது ஊழல் செய்தார் என்பது குற்றச்சாட்டு. இவரது காலத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் சுருட்டினார் என கூறப்படுகிறது.
தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக தாமஸ் நியமனம் செய்யப்பட்ட போது பா.ஜ.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு பொருட்டாக அன்று எடுக்கவில்லை.
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நடந்த போது, தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமசை அது தொடர்பான விசாரணை நடக்கும் போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படி நியமிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தாமஸ் இந்தப் பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் அவர் எப்படி நியாயமான ஊழல் தடுப்பு அதிகாரியாக செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்குப் பின் இந்தப் பொறுப்பில் இருந்து தாமஸ் நீக்கப்பட வேண்டும். இவரைச் சட்ட விரோதமாக நியமனம் செய்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
உயர் மட்டக்குழுவினர் இவர் மீதான நிலுவை வழக்கை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? இந்தப் பரிந்துரைகள் கவனமாக கையாளப்படாததையே காட்டுகிறது. வரும் காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் உயர் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமரைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தாமஸ் முன்வந்து பதவி விலகல் செய்வதாக அறிவித்தார்.
"இத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி" என நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றயை தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதனை வரவேற்பதாவும் பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தீர்ப்பின் மூலம் பிரதமரின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியிருக்கிறது என்றார்.
இந்தத் தீர்ப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குப் பெரும் அடியாக விழுந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இடது சாரி கட்சியினரும் "இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" என கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக