ஜெய்ப்பூர் : "கெட்டுப் போன மருந்தை கொடுத்ததால், கர்ப்பிணிகள் 13 பேர் இறந்த சம்பவம் குறித்து, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'என, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கூறியதாவது: கெட்டுப் போன குளுக்கோஸ் மருந்தை ஏற்றியதால், ஜோத்பூரில் 13 கர்ப்பிணிகள் பலியாகி விட்டனர். இது அதிர்ச்சிகரமான சம்பவம். 13 பேர் இறந்ததற்கு பின் தான், இந்த விஷயத்தில் நடவடிக்கைகளை, மாநில அரசு துவங்கியுள்ளது. அதுவும், சுகாதாரத் துறை மீது எந்த தவறும் இல்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டு, சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக