நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு கடந்தவாரம் கொஞ்சம் கோபமாகவே இருந்தது. இதற்குக் காரணம், தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதுதான். பல திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தொடங்கி, ஒப்பந்ததாரர்களுக்கு விதிகளை மீறி அளித்த பணம், சலுகை எல்லாமும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதால், இந்தத் திட்டங்களின் உண்மைத்தன்மை என்ன, எதுவரையிலும் நடைபெற்று முடிந்துள்ளது என்கிற முழுவிவரங்களை பொதுக் கணக்குக் குழுவிடம் 6 மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். 2008-ம் ஆண்டில் 253 சிறிய மற்றும் பெரிய பாசனத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. இதில் 100 திட்டங்கள் முடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இப்படிச் சொல்லப்பட்ட திட்டங்களில் 12 பாசனத் திட்டங்கள் செய்து முடிக்கப்படாமலேயே, நடைமுறைக்கு வராமலேயே இருப்பதைக் கண்ட பொதுக் கணக்குக் குழு, இவ்வளவு பணம் செலவழித்து என்ன லாபம் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தத் திட்டங்களை மத்திய அரசின் நீர் ஆதார அமைச்சகம் ஏன் கண்காணிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டிருக்கிறது. தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டம் 1996-97-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பாசனப் பரப்பை அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பாசன வாய்க்கால் அமைக்கவும், நதிகளை இணைத்து அல்லது அணைகள் எழுப்பி தண்ணீரை நெடுந்தொலைவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விவசாயிகளுக்குப் பாசனம் தருவதுமே இதன் நோக்கம். அத்திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப மத்திய அரசின் நிதியுதவி அளவும் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை இருக்கும். ஆனால், இத்திட்டத்தின்கீழ் நிதி பெற்ற மாநிலங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. பத்திரிகையாளர்களிடம் இதுபற்றிக் குறிப்பிடும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் மக்கள் பணம் வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வாய்க்கால் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடையாது. ஏனென்றால், தலைமடைப் பிரிவில் பணி முடிக்கப்படவே இல்லை. அதனால், இந்த வாய்க்காலில் தண்ணீருக்கு வழியில்லை. ஆனால், திட்டம் முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கி இருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்குத் துளியும்கூட நன்மை ஏற்படவில்லை''. இந்த நிலை குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், மணிப்பூர், கேரளம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்டாலும், பொதுக் கணக்குக் குழுவுக்குப் பெரும் கோபம் விளைவித்த மாநிலங்கள் இரண்டுதான். ஒன்று ஆந்திரம்; அடுத்தது கர்நாடகம். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, "ஜலயக்ஞம்' என்கிற திட்டத்தைத் தொடங்கினார். பாசனம் இல்லாத பகுதியே இல்லை என்று ஆந்திர மாநிலத்தை மாற்றிவிடுவோம் என்பதுதான் அவரது தேர்தல் சபதமாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், அவரால் இத்திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி வரை நிதி பெறவும் முடிந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டங்களுக்கான பணிகள் குறித்து ஆய்வுகள் நடத்தியபோது, பொதுக் கணக்குக் குழுவினருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. பல பாசனத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களிடம் மறுமதிப்பீடு பெற்று அதற்கான தொகையை அளித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் சிமென்ட், இரும்புக் கம்பி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சுங்கவரி கிடையாது என்கிற சலுகை உள்ளதால், இத்திட்டத்துக்கு வாங்கப்பட்ட மூலப்பொருள்கள் வேறு வேலைக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் பழுது அல்லது குறை ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிபந்தனையை மாநில அரசு வலியுறுத்தவேயில்லை. திட்டம் நிறைவேறும் முன்பாகவே பணம் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கல்வாகுர்தி பாசனத் திட்டத்தில் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் அடைந்த பலன் ரூ.160 கோடி வரை இருக்கும் என்று பொதுக் கணக்குக் குழு அனுமானித்துள்ளது. இதுபோன்று கர்நாடக மாநிலத்தில் மேல் கிருஷ்ணா பாசனத் திட்டம் நிலை-1, நிலை -2 உள்பட நான்கு திட்டங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதை, பொதுக் கணக்குத் தணிக்கைத் துறையே எடுத்துக் காட்டிவிட்டது. இந்தத் திட்டங்களை மேற்பார்வையிடும் பொதுப்பணித் துறை, நீர் ஆதார அமைப்புகளின் உயர் அதிகாரிகளை, பொதுக் கணக்குக் குழு அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளது. "உங்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது?' என்று கேட்டதாகவும்கூடச் சொல்லப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம் மாநில அரசுகள் தரும் திட்டங்களின் சாத்தியத் தன்மை குறித்து மத்திய அதிகாரிகள் முறையாக மறுஆய்வு செய்யாமல் இருப்பதும்தான். ஆய்வுக்காக வரும் உயர் அதிகாரிகளை எப்படி மனம்மகிழச் செய்வது என்பதை மாநிலங்கள் தெரிந்துவைத்திருக்கின்றன. ஓர் ஆறுதல். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பெற்ற நிதியுதவி மிகமிகச் சொற்பம். 2007-ம் ஆண்டில்தான் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறும் முயற்சியைத் தமிழக அரசு மேற்கொண்டது. காவிரி-குந்தாறு இணைப்புத் திட்டம் ரூ.189 கோடி செலவிலும், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ.369 கோடியிலும் நிறைவேற்றக்கோரி கருத்துரு அளித்தது. 2010-ம் ஆண்டு ஆளுநர் உரையில்கூட, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிதி கிடைக்கவில்லை. மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டு வருகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். திட்டமிடப்பட்டிருக்கிறது, திட்ட ஒதுக்கீடு என்று சொல்வதெல்லாம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திட்டமிடுவதால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று இப்போதல்லவா தெரிகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக