புதன், 2 மார்ச், 2011

முன் கூட்டியே தேர்தல்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 13-ந் தேதி வரை உள்ளது. எனவே தமிழக சட்ட சபைக்கு மே மாதம் முதல் வாரம் தேர்தல் நடை பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.   இந்த நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. வரும் 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.
 
தேர்தல் மே மாதம் தான் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் கட்சியினரை மிரள வைத்துள்ளது. கடந்த தடவை 2006-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 26 நாட்களுக்கு முன்பே தேர்தல் வந்து விட்டது.
 
மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுடன் தேர்தல் நடத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.   தேர்தல் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே நடத்தப்பட உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகளிடம் நடந்து வரும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் எவ்வளவு விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கி ரத்தில் பேசி முடித்து விட்டு, வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட முனைந்துள்ளன.
 
இதனால் தமிழக அரசியல் களம் திடீரென விறு விறுப்பு ஆகியுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய 5 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை தி.மு.க. முடித்து விட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள், முஸ்லிம் லீக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
காங்கிரஸ், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய 2 கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாட்டை உறுதி செய்ய வேண்டியதுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 தொகுதி, ஆட்சியில் பங்கு, குறைந்த பட்ச பொது செயல் திட்டம் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தது. ஆனால் இதை ஏற்க தி.மு.க. திட்டவட்டமாக மறுத்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 53 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. கடந்த தடவை 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த தடவை 80 தொகுதிகளுக்கு மேல் பெற்று விட வேண்டும் என்பதில் மிக, மிகத் தீவிரமாக உள்ளது.
 
இதனால் தான் இரண்டு தடவை ஐவர் குழு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தேர்தல் முன்னதாகவே வந்து விட்டதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க. வுடனான தொகுதி பங் கீட்டை விரைந்து உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிவரை கேட்கலாம். தி.மு.க. சம்மதிக்காத பட்சத்தில் 60 தொகுதிகளை யாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
 
தி.மு.கழகத்தைப் பொருத்த வரை குறைந்த பட்சம் 135 முதல் 140 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. சட்டசபையில் தனிப் பெரும்பான்மை பலம் பெற இந்த எண்ணிக்கை அளவில் போட்டியிட வேண்டியது அவசியம் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தி.மு.க. விளக்கியுள்ளது. எனவே தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் 53 தொகுதிகளை காங்கிரஸ் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
 
தமிழக அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு சோனியா உள்பட காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் அனைவரும் தங்கள் பிடிவாதத்தில் இருந்தும், சற்று இறங்கிவந்துள்ளனர். இனியும் கூடுதல் தொகுதி கேட்டு, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன் வைப்பது பலன் தராது என்பதை உணர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் சோனியா அல்லது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேசி தொகுதி பங்கீடு உடன் பாட்டை சுமூகமாக்குவார்கள் என்று ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு தலைவர் கூறினார்.
 
கொங்கு மண்டலத்தில் 5 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரமாகி உள்ளது. அந்த கட்சியினர் தி.மு.க.விடம் 7 தொகுதிகள் கேட்கிறார்கள். ஆனால் தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் மட்டும் கொ.மு.க.வுக்கு கொடுக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும் தொகுதியை பொறுத்தே காங்கிரசுக்கான இட விபரங்களை இறுதிக்கு வரும். தற்போதைய நிலவரப்படி தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.-135, காங்கிரஸ்-53, பா.ம.க.-31, விடுதலைச் சிறுத்தைகள்-10, கொங்கு நாடு முன்னேனற்றக் கழகம் -5, முஸ்லிம்லீக்-3 என்ற எண்ணிக்கையில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி, தேசிய லீக், பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி, விவசாயிகள் கட்சி உள்பட 14 கட்சிகள் அங்கும் வகிக்கின்றன.
 
இந்த மெகா கூட்டணியில் இதுவரை 4 கட்சிகளுடன் தான் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. மனித நேய மக்கள் கட்சி-3, புதிய தமிழகம்-2, குடியரசு கட்சி-1, மூவேந்தர் முன்னணி-1 என்ற ரீதியில் அ.தி.மு.க.விடம் தொகுதிகளை பெற்றுள்ளன. மற்றக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள்.
 
நேற்று அவர்கள் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தினார்கள்.   கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சுமுக உடன்பாடு வந்து விட்டது. ஓரிரு நாளில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும். மேலும் கூட்டணியில் உள்ள சிறு, சிறு கட்சிகளுக்கும் அ.தி.மு.க. கொடுக்கும் தொகுதிகள் விபரமும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமை கட்சியாகத் திகழும் ம.தி.மு.க. வுக்கு இந்த தடவை அ.தி.மு.க. குறைந்த தொகுதிகளையே கொடுக்கும் என்று பேச்சு நிலவுகிறது.
 
12 முதல் 15 தொகுதிகள் வரை ம.தி.மு.க. வுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ளதாக இருக்கும் என்று உறுதி கூறப்பட்டு இருப்பதால் ம.தி.மு.க., அந்த தொகுதிகளை ஏற்க முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   அ.தி.மு.க. அணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுடன் வருகிற வெள்ளிக்கிழமை தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை அ.தி. மு.க. வெளியிடும் என்று தெரியவந்துள்ளது. 4-ந் தேதி பூரண அமாவாசை என்பதால், அன்று தொகுதி பங்கீட்டை வெளியிட அ.தி. மு.க. ஆர்வமாக உள்ளது.
 
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று தே.மு. தி.க. ஏற்கனவே கூறி விட்டது. ஆனால் சற்று கூடுதலாக தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்ததும் வேட்பாளர் தேர்வு சூடு பிடித்து விடும்.

கருத்துகள் இல்லை: