சனி, 5 மார்ச், 2011

தவறான தீர்ப்பு!


ஒரு நபர் காணாமல் போனால், அவரது சொத்துகளை, அவர் இறந்ததாகக் கருதி அவரது வாரிசுகள் பாகப்பிரிவினை செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஆக வேண்டும். அதன்பின்னர், அவர் இல்லாதவராகக் கருதப்பட்டு, விற்பனை அல்லது பாகப்பிரிவினை செய்ய முடியும். ஓர் அரசு ஊழியர் காணாமல் போனாலும்கூட, அவருக்கான பலன்களை அவரது குடும்பத்துக்கு வழங்கிட இதே விதிமுறைகள்தான் நடைமுறையில் உள்ளன.  ஒரு வழக்கை எத்தனை காலம் நடத்தலாம் என்பதற்கு இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லை. ஆனால், அதிசயமாக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தில்லி பெருநகர நடுவர் மன்றத்தின் நீதிபதி வினோத் யாதவ். போபர்ஸ் பீரங்கி வழங்கில் குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை சிபிஐ விலக்கிக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு. இதற்கு சொல்லியுள்ள காரணம், இந்த வழக்குக்காக இதுவரை ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது. குவாத்ரோச்சியை நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தவும் முடியவில்லை. இதனால் மக்கள் பணத்தை இப்படி வீணாக்குவதைக் காட்டிலும், அவர் மீதான வழக்கை சிபிஐ விலக்கிக்கொள்ளலாம் என்பதே.  இந்த வழக்கில் நீதிபதி குறிப்பிடும் ரூ.200 கோடி என்பது போபர்ஸ் ஊழல் அளவைவிடப் பெரிய தொகை. ஆகையால், சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணமா என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து குவாத்ரோச்சியை விலக்கிவிடலாம் என்று கூறியுள்ளார் நீதிபதி.  அவர் சொல்வதை சரி என்று எடுத்துக்கொண்டால், ரூ. 1,437 கோடி மதிப்புள்ள போபர்ஸ் பீரங்கி விற்பனையில் குவாத்ரோச்சி மற்றும் வின் சத்தாவுக்கு ரூ.41 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு, அண்மையில் வருமான வரி மேல்முறையீட்டு நடுவர்மன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த கமிஷன் தொகை இந்திய அரசு கொடுத்த பணம் என்பதால், இதற்கான வருமான வரியைச் செலுத்தியாக வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம். குவாத்ரோச்சி இந்தியாவைப் பொறுத்தவரை, அவரை இத்தனை நாள்களாக பிடிக்கவே முடியவில்லை என்பதால், இல்லாதவராகக் கருதி இந்த வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துவிட முடியுமா? அது நியாயமாகுமா?  ஒரு குற்றவாளியை சுமார் 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியவில்லை என்கிற ஒரு காரணத்துக்காக, அவர் மீதான வழக்கை முடித்துக் கொண்டுவிடலாம் என்கிற நடைமுறைக்கும் அல்லவா இந்தத் தீர்ப்பு வழிகோலுகிறது. இதேபோன்று ஒரு கொலை வழக்கில், கொலையாளியைப் பல காலமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து, வழக்கையும் முடித்துக்கொள்ள முடியுமா?  வெளிநாட்டில் ஒளிந்துவாழும் ஒரு தீவிரவாதியை, நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டுவந்து வழக்கு நடத்த முடியவில்லை என்பதற்காக, வழக்கை விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்தால் அது சரியாகுமா?  வருமான வரி மேல்முறையீட்டு நடுவர்மன்றம் குவாத்ரோச்சிக்கு எதிரான தனது தீர்ப்பை வெளியிட்ட அடுத்தநாள்தான் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்து விடுவித்து, இந்த வழக்கை முடித்துவிட அனுமதி கோரியது சிபிஐ என்பதுதான் இந்தச் சம்பவத்தின் மிகப்பெரிய விபரீதம். வருமான வரிக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பே இல்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடிய அவலம் அதைவிடக் கொடுமையான ஒன்று.  1986-ம் ஆண்டு நடைபெற்ற போபர்ஸ் பீரங்கிப் பேரத்தில் இடைத்தரகில் ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ 1990-ம் ஆண்டு ஜனவரி 22-ல் வழக்குப் பதிவு செய்தது. 1997 ஜனவரி 30-ம் தேதி, சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ நியமிக்கிறது. அதாவது 7 ஆண்டுகள் கழித்துத்தான் இப்படியொரு யோசனை அரசுக்கும், அரசின் கைப்பாவையாகச் செயல்படும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் தோன்றுகிறது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.  2003-ம் ஆண்டு மலேசியாவில் சிக்கிய குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த சிபிஐ-க்கு சாத்தியப்படவில்லை. 2007-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் அவர் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த சிபிஐ-க்கு முடியவில்லை. ஆனால், அவர் மீதான வழக்கை, இத்தனை காலமாக நடத்திக்கொண்டிருப்பது அர்த்தமற்றது என்று மட்டும் சிபிஐ-க்குத் தோன்றுகிறது. வழக்கை முடித்துக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறது. அதை நீதிமன்றமும் அனுமதிக்கிறது.  போபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதில் இடைத்தரகர்கள் இல்லை என்று அப்போது மத்திய அரசு கூறியது பொய் என்பது இப்போது நிரூபணமாகிவிட்ட நிலையில், குவாத்ரோச்சி இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவராக இருக்கும் சோனியா காந்தியின் குடும்ப நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி, குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். இல்லையென்றால், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.  மக்கள் பணம் ரூ. 200 கோடி வீணாக்கப்பட்டுள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை - இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த நடவடிக்கையும் செய்யாமல் வெட்டியாகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததும்!. அதுவும் மக்கள் பணம்தானே! அந்தச் சம்பளத்தைத் திரும்பப் பெறுவதும்கூட நியாயம்தானே! குவாத்ரோச்சி பெயரைச்சொல்லிக் கொண்டு வெட்டிச் சம்பளம் வாங்கி வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு, குவாத்ரோச்சிக்குத் தரப்பட வேண்டிய தண்டனையை அளித்திருந்தால், ஒருவேளை அதிகாரிகள் அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அவலம் குறையவாவது வாய்ப்பிருக்கிறது.  எந்தத் தடயமும், துப்பும் கிடைக்கவில்லை என்று கைவிரித்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தேவாஸ் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட எல்லா ஊழல்களுமே, சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடுவிழா நடத்தப்படுவதற்கான "வெள்ளோட்டம்'தானோ இந்தத் தீர்ப்பு?

கருத்துகள் இல்லை: