தஞ்சாவூர்: பல்வேறு சாதி, மதம், மொழி, இனத்தவர்கள் ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அவர்களிடையே சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:வாக்காளர் விவர சீட்டுகளை சின்னங்கள் குறிப்பிடாமல் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு அளிக்கலாம். அரசு சுவர்களில் சுவரொட்டி ஒட்டவோ, எழுதவோ தடை செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. சமூக வேறுபாட்டையோ, பகைமையை வளர்க்கும் வகையிலோ பிரசாரம் செய்யக் கூடாது.தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறினால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரசாரத்தில் பயன்படுத்தும் வாகனத்தில் வெளிப்புற மாற்றம் செய்யவும், ஒலிபெருக்கி அமைக்கவும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.தேர்தல் தொடர்பாக பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த காவல் துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கிகளை அதிகாலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவைத் தாண்டி தாற்காலிக அலுவலகம் அமைக்கலாம். ஒரு டேபிள், 2 நாற்காலிகள், ஒரு குடை அல்லது தார்பாலின் மட்டுமே அனுமதிக்கப்படும்.தனியார், அரசு நிலங்களை ஆக்கிரமித்தோ, மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, மருத்துவமனைகள் அருகிலோ அலுவலகம் அமைக்கக் கூடாது. வேட்பாளருக்காக அனுமதிக்கப்பட்ட வாகனத்தை தவிர வேறு வாகனத்தைப் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கோ, அங்கிருந்து அவர்களது வசிப்பிடங்களுக்கோ வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்றார் ஆட்சியர்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கபில்குமார் சி. சரட்கார், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், அரசியல் கட்சி நிர்வாகிகள் சோம. செந்தமிழ்ச் செல்வன் (திமுக), ஆர். வைத்திலிங்கம் (அதிமுக), நாஞ்சி கி. வரதராஜன் (காங்கிரஸ்), கோ. நீலமேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ. சந்திரகுமார் (இந்திய கம்யூ.), மகேந்திரன் (பாஜக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக