தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 15 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து வருகிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.
ஆனால் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு மட்டும் சிக்கலாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை தொடர்ந்து தி.மு.க.விடம் வலியுறுத்தி வருகிறது.
முதலில் 90 தொகுதி கேட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கையை குறைத்தனர். 85, 80, 75, 70 என்று நடந்த பேரம் கடைசியில் 60 ஆக வந்து நின்றது. 60 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள சம்மதித்த காங்கிரஸ் தலைவர்கள் திடீரென நேற்று அந்த 60 தொகுதிகள் எவை, எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை இறுதி செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனை விதித்தனர்.
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காங்கிரஸ் நிபந்தனையை ஏற்க தி.மு.க. விரும்பவில்லை. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்து வரும் நெருக்கடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் திடீரென 63 இடங்கள் கேட்பதும், அவை எந்தெந்த இடங்கள் என்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய இரு தரப்பிலும் உள்ள சில தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் இன்று மதியம் வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் அவர் இன்று சென்னை வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடையும் என்பதில் கேள்விக் குறி எழுந்துள்ளது.இந்த நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இன்று (சனி) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
எனவே தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு மிக, மிக, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தி.மு. கழகத்தின் அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக நிலவுகிறது. தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான 7 ஆண்டுகால உறவு என்ன ஆகும் என்பதற்கு இன்றைய தி.மு.க. உயர்நிலைசெயல் திட்டக்குழுக் கூட்டத்தில் விடை கிடைத்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக