ஞாயிறு, 6 மார்ச், 2011

திமுக சிறுபான்மை சமுதாயத்தின் அரண்:நெப்போலியன் பேச்சு

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீலாது விழா, மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன் "திமுக அரசு சிறுபான்மை மக்களின் அரணாக விளங்குகிறது" என்று கூறினார்.
கல்லிடைக்குறிச்சியில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாண்டியன் கிராம வங்கியின் மேலாளர் கே.எம். அஷ்ரப் தலைமை வகித்தார். எம். சாகுல்ஹமீது, பேரவையின் துணை பொதுச்செயலர் எஸ்.எம். சாகுல்ஹமீது, எஸ். அப்துல்மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ. அப்துல்ஹமீது வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ். இர்ஷாத்ஹமீது, நஸ்ரின்பானு, கட்டுரை, பேச்சு, குர்ஆன் மனனப்போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: மனிதன் உழைப்பால் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வருகிறார். சிறுபான்மை மக்களின் அரணாக திமுக அரசு விளங்குகிறது. வாழ்வில் நாம் சம்பாதிக்கும் சொத்துக்கள் நம்மோடு வருவதில்லை. நாம் பயின்ற கல்வி மட்டுமே மனித வாழ்க்கையில் உயர்வை தரும் என்றார் அமைச்சர் நெப்போலியன்.

விழாவில் லால்பேட்டை ஜெ.எம்.ஜெ. அரபிக் கல்லூரி பேராசிரியர் ஜெ. ஜாஹீர்உசேன், வேலூர் அரபிக் கல்லூரி பேராசியர் எஸ். முகம்மதுசதக்கத்துல்லா ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் க. இசக்கிபாண்டியன் வாழ்த்தி பேசினார். விழாவில் துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன், ஜமாத் தலைவர் என். இபுராஹீம், பேரூராட்சி உறுப்பினர் த. ராமகிருஷ்ணன், முன்னாள் உறுப்பினர் வி.கே. அனிபா, எம். பீர்முகம்மது, ஆசிரியர் மு. சாகுல்ஹமீது, வியாபாரிகள் சங்கத் தலைவர் ஸீனத்சாகுல்ஹமீது, பேஷ்இமாம் பி. ஷேக்மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரவையின் தலைவர் டி.எம்.ஏ. முகம்மதுரபீக் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏ. அப்துல்ஹமீது வரவேற்றார். அ. முகம்மதுரபீக் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை: