2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தனது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை மறைக்கவே, மத்திய அரசில் இருந்து விலகுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்து, பிரச்னையை அரசியல் நெருக்கடியாக்க முற்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசில் இருந்து, விலகுவதாக தி.மு.க. அறிவித்தது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது: காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் வரை கொடுக்க முன்வந்தும், அவர்கள் 63 இடங்கள் கேட்பதாக தி.மு.க. கூறுகிறது. இதனால்தான் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தி.மு.க. திரும்பப் பெருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது நம்பத்தகுந்ததாக இல்லை. ஏனென்றால் 60-க்கும் 63-க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உண்மையில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது, அதனால் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், மகள் கனிமொழியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் இந்த வழக்கு உள்ளதால் தில்லியில் உள்ள காங்கிரஸ் அரசாலும் அவர்களைக் காப்பாற்றுவது கடினம். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகு மத்திய அரசுக்கு தந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டால் அது ஊழல் தொடர்பானது என்ற காரணத்தால் தி.மு.க.வினரே கூட கருணாநிதியின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே அதற்குப் பதிலாக இப்போதே சீட்டு பேரத்தை காரணம் காட்டி மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது தி.மு.க.; மேலும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாளை கைது செய்யப்பட்டால், அது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டதாக திசை திருப்ப வசதியாக இருக்கும். தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை மூடி மறைக்க கருணாநிதி சீட்டு பேரத்தைப் பயன்படுத்துகிறார் என்றே நான் கருதுகிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களையும் குறிப்பாக தி.மு.க.வினரையும் ஏமாற்றும் சூழ்ச்சியைத் தவிர இது வேறு ஏதும் அல்ல' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக