திங்கள், 7 மார்ச், 2011

மீண்டும் திமுக-காங். பேச்சு எதிரொலி: சிபிஎம்மை அழைத்து பேசிய அதிமுக

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதலால் ஒரு வேளை, காங்கிரஸ் தனது கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் கடந்த 3 நாட்களாக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்திருந்த அதிமுக, இன்று காலை திடீரென திமுக, காங்கிரஸ் இடையே மறுபடியும் சமரச முயற்சிகள் தொடங்கியதையடுத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் பேச அழைத்தது.

வழக்கமாக அதிமுக அலுவலகத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை இன்று ஒரு ஹோட்டலில் நடந்தது.

எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் என்பது அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மிக மிகப் பொருத்தம். அதைத்தான் தற்போது அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

கடந்த பல வருடங்களாக மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் நேற்று வந்த விஜய்காந்துக்கு 41 தொகுதிகளை உடனடியாக அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. ஆனால், மதிமுக-இடதுசாரிகளுக்கு இன்னும் சீட்களை ஒதுக்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையலாம் என்று ஜெயலலிதா நினைப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை நேற்று முன் தினமே முடிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கட்சிகளும் அந்த எதிர்பார்ப்பில் தான் இருந்தன. இந் நிலையில் திமுக-காங்கிரஸ் மோதல் தீவிரமானதையடுத்து இந்தக் கட்சிகளுடன் பேசுவதையே அதிமுக திடீரென நிறுத்திவிட்டது.

நேற்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் இரவு 10 மணி வரை அதிமுகவிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தனர். ஆனால், ஒரு போன் கூட வரவில்லை. இதனால் இந்தக் கட்சிகள் பேயறைந்த நிலையில் இருந்தன.

மதிமுக, இடதுசாரிகள் இல்லாத கூட்டணியில் சேர காங்கிரசுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்பதால், இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா தனி திட்டம் போட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஜெயலலலிதாவுக்கு வேண்டிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த வேலைகளை டெல்லியில் முடுக்கி விட்டுள்ள நிலையில் மதிமுக, இடதுசாரிகள் பெரும் கவலையில் மூழ்கியிருந்தனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 41 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது. சிறிய கட்சிகளுக்கு 8 இடங்களை ஒதுக்கியுள்ளது. இப்போது மீதம் உள்ளது 185 இடங்கள். இதில் தனது அணியில் காங்கிரஸ் இணைந்தால் அவர்களுக்கு 60 இடங்களை வரை தர ஜெயலலிதா தயாராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் வந்துவிட்டால் இடதுசாரிகளும் தாங்களாகவே வெளியே போக வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் சீட்கள் இல்லை என்ற காரணத்தால் வைகோவும் வெளியேற வேண்டிய நிலை வரலாம்.

ஜெயலலிதா எந்த நேரமும் எடுத்தேன் கவிழ்த்தேன் வேலையை செய்யக் கூடியவர் என்பதாலும், அவருக்கு அட்வைஸ் தந்து வரும் ஆர்எஸ்எஸ்-பாஜக சார்புடைய மூத்த பத்திரிக்கையாளருக்கு வைகோ, இடதுசாரிகள் என்றால் வேம்பாகக் கசக்கும் என்பதாலும் மதிமுகவும் இடதுசாரிகளும் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தன.

லேட்டஸ்ட் நிலவரம் குறித்து விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது செயற்குழுக் கூட்டத்தை இன்று அவசரமாகக் கூட்டியது. அதில் ஏதாவது ஏடாகூடமான முடிவெடு்த்துவிடுவார்களோ என்று அதிமுக நினைத்திருந்த நிலையில், இன்று காலை திடீரென திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சனையில் அரசியல் நிலைமை மாறியது.

ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு தூது விட்டது. இதையடுத்து சில பல சமரசங்களுடன் இரு தரப்பும் மீண்டும் ராசியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அதிமுக, தற்போது தனது கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் பேச முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்தது. வழக்கமாக பேச்சுவார்த்தை நடக்கும் அதிமுக அலுவலகத்துக்கு வரச் சொல்லாமல் ஒரு ஹோட்டலில் வைத்து இந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், இதில் தொகுதி உடன்பாடு ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உங்களை கூட்டணியில் தான் வைத்திருக்கிறோம் என்று சிபிஎம்முக்கு சிம்பாலிக்காக சொல்லும் வகையிலேயே இன்றைய சந்திப்பு நடந்துள்ளது.

முன்னதாக இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக அழைத்துள்ளது. நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே நீடிப்போம். அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.

கேள்வி: கம்யூனிஸ்டு கட்சிகள் அதிமுகவில் இருந்து வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளாரே?

ராமகிருஷ்ணன்: நாங்கள் ஊழலையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து வருகிறோம். எனவே இந்த கருத்து முரண்பாடானது. அதற்கு வாய்ப்பில்லை.

கேள்வி: காங்கிரஸ்-அதிமுக கூட்டணி ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே, அப்படியானால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

ராமகிருஷ்ணன்: இன்று மாலை அதிமுக எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இதில் இறுதி முடிவு ஏற்படும். எனவே காங்கிரஸ்- அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.

சிபிஎம்முக்கு அழைப்பு வந்துள்ளதால் மதிமுகவும், சிபிஐயும் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. அடுத்த ரவுண்டு நமக்குத்தான் என்ற நம்பிக்கையிலும், நிம்மதிப் பெருமூச்சிலும் அவை உள்ளன.

காங்-அதிமுக கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை!-இது மார்க்சிஸ்ட்:

இந் நிலையில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதற்கான அறிகுறி எதுவும் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

அவரிடம் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்று நிருபர்களின் கேட்டதற்கு, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் நாங்கள் (மார்க்சிஸ்ட்) இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இந் நிலையில், கூட்டணிக் கட்சிகளை விட்டு விட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான அறிகுறி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை.

அதிமுகவுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் பிரச்சனை என்பது புதிதல்ல. ஏற்கனவே, மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் பிரச்சனை எழுந்தது. அது, அவர்கள் பிரச்சனை. விரைவில் தீர்த்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.

ஒரு கூட்டணியில் சிக்கல் என்றால் அடுத்த கூட்டணிக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்பது அரசியல் நடைமுறைதானே. என்ன நடக்கிறது என்பதை நீங்களே விரைவில் பாருங்கள் என்றார்.

இந் நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே டெல்லியில் மீண்டும் சாமதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்று மாலை பேச்சுவார்த்தை அதிமுக அழைத்துள்ளது.

இன்று மாலை அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியிலேயே நாங்கள் தொடர்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை திமுக-காங்கிரஸ் சிக்கல் தீ்ர்ந்துவிட்டால் இடதுசாரிகள் தேவைப்படுவர் என்பதால் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் இன்று மாலை சந்தி்ப்புக்கு அதிமுக அழைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் இதில் தொகுதிகள் முடிவாவது சந்தேகமே என்கிறார்கள்.

அதே நேரத்தில் அதிமுகவில் முக்கிய கட்சியான மதிமுகவுக்கு இன்னும் அழைப்பு வராதது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: