தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிக குறுகிய கால அவகாசமே உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் கடந்த சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைதான் பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதில் இன்று சுமூக முடிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 இடம், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 இடம், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி முதலில் 90 இடங்களை எதிர்பார்த்தது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு 60 தொகுதிகளை பெற்றுக் கொள்ள காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் 60 தொகுதிகளும் தாங்கள் விரும்பும் தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புதிய கோரிக்கை ஒன்றை தி.மு.க. விடம் வைத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் அதிகமாகவும், தங்கள் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளும் தொகுதிகளையும் காங்கிரசார் பட்டியலாக கொடுத்துள்ளார்களாம். இது தி.மு.க. தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.காங்கிரஸ் சுட்டிக் காட்டும் 60 தொகுதிகளை அப்படியே கொடுக்க இயலாது என்று தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திடுவது தாமதம் ஆனது.காங்கிரஸ்காரர்கள் கேட்கும் 60 தொகுதிகளில் பெரும்பாலனவை கிராம தொகுதிகளாக உள்ளனவாம். ஆனால் தி.மு.க. அந்த தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.
நகர்ப்புறங்களில் உள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு அதிகமாக கொடுக்க தி.மு.க. முன் வந்துள்ளதால் இன்று மதியம் வரை அதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இன்றிரவுக்குள் 60 தொகுதிகளை அடையாளம் காணும் விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டு விடும் என்று இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இன்றிரவு தீர்வு ஏற்படும் பட்சத்தில் தொகுதி பங்கீடு அறிவிப்பை இன்றிரவே தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து ஐவர் குழு வருவதில் தாமதம் ஏற்பட்டால், நாளை தொகுதி பங்கீடு பற்றி உறுதியாக அறிவிக்கப்பட்டு விடும்.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் திடீரென தனது சொந்த மாநிலமான காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 14 கட்சிகள் உள்ளன. இதில் 4 கட்சிகளுடன் மட்டுமே அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடது சாரிகள், ம.தி.மு.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்கனவே தொகுதி பங்கீடு விபரங்களை பேசி முடித்து விட்டதால் எந்த சிக்கலும் இல்லாமல் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 48 இடங்களை தே.மு.தி.க. கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. - தே.மு.தி.க. தலைவர்கள் பல தடவை சந்தித்துப் பேசி சுமூகமான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று மாலை விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா மற்றும் கட்சி மூத்த தலைவர்களுடன் போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜய காந்தும் கையெழுத்திடுவார்கள்.
விஜயகாந்த் போயஸ் கார்டனுக்கு செல்ல இயலா விட்டால் பண்ருட்டி ராமச்சந்திரன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று மற்றொரு தகவல் பரவி உள்ளது. இன்றிரவுக்குள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை அ.தி. மு.க. இறுதி செய்து அறிவித்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக