சனி, 5 மார்ச், 2011

காங்கிரஸை திமுக 'கழற்றிவிட' வேண்டும்: கி.வீரமணி

தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்கு திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசை தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலை சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும் என்றார்.

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரது அறிக்கை- நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான- நடைமுறைக்கு சாத்தியமற்ற- தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை, காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், திமுக அவர்களின் நிபந்தனையை ஏற்கும் கட்சியாகவும் உள்ளது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

திமுக தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இந்தக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும்- நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுக செயல் வீரர்- வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு கொள்ள வேண்டும். எனவே திமுகவின் உயர்நிலை அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது என்று கூறியுள்ளார்.

வீரமணியின் இந்த அறிக்கை-பேட்டி மூலமாக காங்கிரசுக்கு திமுக மீண்டும் தருவதாகத் தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையை காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தி.க. மூலம் திமுக விடுத்துள்ள எச்சரிக்கையாகவே கருதப்பட்டது. இந் நிலையில் திமுக உயர் மட்டக் குழு இன்று மாலை கூடவுள்ள நிலையில் காங்கிரஸை தவிர்க்குமாறு வீரமணி மீண்டும் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை: