சனி, 5 மார்ச், 2011

காங்கிரசின் நிபந்தனை அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு

மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுச்செயலளார் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011 ஏப்ரல் திங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதுவிதமான சில பிரச்சனைகளை உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பது திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவித முடிவும் ஏற்படாத நிலையில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அவர் முன்னிலையிலேயே நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின்பொழுது, 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதென ஒப்புதல் அளித்தோம்.

மேலும் டெல்லி சென்று மேலிடத்தை கலந்துகொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார். பின்னர் டெல்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத் 60 தொகுதிகள் காங்கிரசுக்கு தந்தால் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றார். இதனைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது 63 தொகுதிகள் வேண்டும் என்றும், எத்தனை தொகுதிகள் ஒப்பந்தம் செய்யும்போது, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

60 தொகுதிகளுக்கு திமுக ஒப்புதல் அளித்த பிறகும், 63 தொகுதிகள் வேண்டும் என்பதும், அந்த தொகுதிகளின் பெயரிலே பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே நிபந்தனை விதிப்பது அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக, இதையே சாக்காக வைத்து திமுகவை அணியிலிருந்தே அகன்றுவிட செய்தவற்கான காரியமோ என்று ஐயம் ஏற்பட்டது.

60 இடங்கள் கேட்டு அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களை அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும், வேண்டுமென்றே இந்த அணியில் அவர்கள் தொடர விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே திமுக தன்னை விடுவித்துக்கொள்கிறது. மத்திய அரசுக்கு பிரச்சனையின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்க உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: