சனி, 5 மார்ச், 2011

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு ஜெயில்: பிற மாநில ஐ.ஜி.க்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்; மத்திய பாதுகாப்பு படை வருகை

மிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டது. தேர்தலுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் பணப் புழக்கத்தை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
பண பட்டுவாடாவை தடுப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் வருகின்றன. ஒரு கம்பெனிக்கு சுமார் 100 வீரர்கள் வீதம் 5 கம்பெனிகள் இன்று வருகின்றன.
 
இன்னும் 2 நாட்களுக்குள் மேலும் 30 கம்பெனிகளும், வருகிற 13-ந்தேதிக்குள் மீதமுள்ள 15 கம்பெனிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து விடும். குஜராத், பீகார், ஒரிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இவர்கள் வருகிறார்கள்.   முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தமிழகம் வருகிறார்கள்.
 
இவர்கள் பண புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தேர்தல் கமிஷனுடன் சேர்ந்து கவனிப்பார்கள். இது தவிர பொதுவான தேர்தல் பார்வையாளர்கள் மனுதாக்கல் தொடங்கும் 9-ந்தேதிக்குள் வருவார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது 196 கம்பெனி மத்திய படைகள் வரவழைக்கப்பட்டன.
 
இந்த முறை மொத்தம் 266 கம்பெனி மத்திய படைகள் தேவை என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் தேர்தல் நேரத்தில் தேவைக்கு ஏற்ப வரவழைக்கப்படுவார்கள்.தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறி விட்டார். எனவே இனி மாற்றம் இருக்காது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
 
இரவு 11 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது போல ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்கும். 2006 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
2009 பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததாக 3 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. 13 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப்பட்டால் சுமார் 2 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
 
சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு நடத்தப்படும். தேர்தல் சம்பந்தமாக பொதுச்சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகை, தொலைக் காட்சி, இண்டர்நெட் மூலம் விளம்பரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய வேண்டும்.எஸ்.எம்.எஸ். விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.
 
ஜாதி, மதம் இவற்றை தூண்டும் வகையில் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பது குறித்தோ, தேர்தல் முறைகேடு பற்றியோ 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு 1965 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு பறக்கும் படை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: