மத்திய அரசிலிருந்து தனது அமைச்சர்களை விலக்கிக் கொள்வது என்றும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனை ஆதரவு வழங்குவது என்றும் தி.மு.க. உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பது யாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதோ இல்லையோ, பெருவாரியான தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறி மாறி கூட்டணி அமைத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஒரு டஜனுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உயர்மட்டக் குழு இப்படி ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இரண்டு மூன்று நாள்களாகவே இருந்து வந்தது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி "குட்டக் குட்டக் குனிய வேண்டிய அவசியமில்லை' என்று தி.மு.க.வுக்கு வேண்டுகோள் விடுக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் உடனடியாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். இந்த அறிக்கைதான் தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையை மிகவும் எரிச்சலூட்டி மேலும் அழுத்தமாகத் தி.மு.க. தலைமையிடம் தனது கோரிக்கைகளை வலியுறுத்த வைத்தது என்றும் கூறுகிறார்கள். தங்களுடன் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தாமலே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியதும், குலாம் நபி ஆசாத்திடம் அடுத்த நாள் பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லிவிட்டுக் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடங்களைத் தி.மு.க. தலைமை ஒதுக்கியதும் காங்கிரஸைச் சீண்டிப் பார்க்கத் தி.மு.க. மேற்கொண்ட உத்தி என்கிறது காங்கிரஸ் தரப்பு. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை விடுத்த காங்கிரஸின் நியாயமற்ற கோரிக்கை பற்றிய அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் அவர்கள். ""நாங்கள் 90 தொகுதிகள் கேட்டோம். குறைந்தது ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று 78 இடங்களாவது தரப்பட வேண்டும் என்று கேட்டோம். 48லிருந்து 60 இடங்கள் வரை நாங்கள் உயர்த்தினோம் என்கிறார் முதல்வர் கருணாநிதி. நாங்கள் 90லிருந்து 63 வரை குறைத்து வந்திருக்கிறோம் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்? கடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத தி.மு.க. 5 ஆண்டு காலம் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் ஒரு "மைனாரிட்டி' அரசாகத் தொடர முடிந்தது என்றால் அதற்கு நாங்கள் பேசாமல் இருந்ததுதான் காரணம். மத்திய அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்தது மட்டுமின்றி, "ஸ்பெக்ட்ரம்' போன்ற "மெகா' ஊழல்களால் எங்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருப்பதை மறுக்கவோ மறக்கவோ முடியுமா? நாங்கள் இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியும் என்று தி.மு.க.வுக்கு இருக்கும் அதே துணிவும், தைரியமும் எங்களுக்கும் இருக்கிறது'' என்கிறது காங்கிரஸ் தரப்பு. காங்கிரஸ் தேசிய அளவில் பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஸ்பெக்ட்ரம்' பழியிலிருந்து தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால், எதிர்க்கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக எடுக்கப் போகும் மிகப்பெரிய ஆயுதம் ஸ்பெக்ட்ரமாகத்தான் இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்தியப் புலனாய்வுத் துறை செயல்படுவதால், தி.மு.க. மீதும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் காங்கிரஸால் தடுக்க முடியாத நிலைமை. தி.மு.க. மீதான நடவடிக்கைகள், மத்திய ஆட்சியில் அந்தக் கட்சி அங்கம் வகிப்பதால், காங்கிரஸுக்கு மேலும் மேலும் கெட்ட பெயரையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டால், ஒருவேளை எதிர்பாராத விதமாகக் தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு அதிர்ச்சிகளை காங்கிரஸ் ஏற்படுத்தக்கூடும் என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு. முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுமார் 6 மாதம் முன்பு ஒரு வார இதழில் வெளிவந்த தனது பேட்டியைப் படிக்கச் சொல்லித் தந்தார். அந்தப் பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டிருந்தது இதுதான்- ""தமிழகத்தில் ஏறத்தாழ 15 லட்சம் பேர் இளைஞர்கள் காங்கிரஸின் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களில் 5 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள் என்றே சொன்னாலும், மீதமுள்ள 10 லட்சம் பேர் நிஜமான உறுப்பினர்கள்தானே? பூத் வாரியாகத் தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள். அதனால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தோரணம் கட்டக்கூட ஆளிருக்காது, தொண்டர்களே கிடையாது, பூத் ஏஜெண்டுகள் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். அதிகமான இடங்களில் நாங்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது காங்கிரஸுகத்தான் இருக்கும்.'' ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த தைரியம்தான் காங்கிரஸ் தலைமையையும், அதிக இடங்களைக் கேட்கத் தூண்டியிருக்கும் என்று கருத வாய்ப்பிருக்கிறது. ""கடந்த 40 ஆண்டுகளாக, பெருவாரியான தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால் காங்கிரஸ் தனது அமைப்புகளை இழந்து விட்டிருக்கிறது. வெற்றி பெற்ற தொகுதிகளை, மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்று வந்ததால், பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்புகளே இல்லாமல் போய்விட்டது. இப்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகுதான் காங்கிரஸ் புத்துயிர் பெற்றிருக்கிறது'' என்று விளக்கினார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். தனித்துப் போட்டியிடுவதில் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்கிறார்கள், இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர். 2001-ல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதுபோல, காங்கிரஸும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் போனால், நாமும் தமிழகத்தில் செல்லாக் காசாகி விடுவோம் என்கிறார்கள். திமுக இப்போது உள்ள காங்கிரஸ் தொகுதிகளை உள்ளடக்கிய 60 தொகுதிகள் தருவதே பெரிது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தி.மு.க.விடம் சமரசமாகப் பேசி 50 இடங்களுக்கே கூட ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார்கள் இந்த தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள். இளைஞர் காங்கிரஸாரின் கருத்து இதற்கு நேரெதிராக இருக்கிறது. ""தமிழகத்தில் காங்கிரஸுக்குக் குறைந்தது 12% வாக்கு வங்கி உண்டு என்பதும்,234 தொகுதிகளிலும் அது பரவலாக இருக்கிறது என்பதும் மாற்றுக் கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. அதேபோல, கடந்த தேர்தல்களில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10% வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்று தேவை என்று கருதியவர்களின் வாக்குகள் என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் கடந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற 10% வாக்குகளிலிருந்து 4% வாக்குகள் காங்கிரஸுக்கு மாறும். காங்கிரஸ் 15% முதல் 18% வாக்குகள் பெறக்கூடும். சுமார் 20 முதல் 30 இடங்களில் வெற்றியும் பெறக்கூடும்'' என்பது இளைஞர் காங்கிரஸார் மட்டுமல்ல, காங்கிரஸ் மேலிடமும் எதிர்பார்க்கும் முடிவு. சுமார் 15% வாக்கு வங்கி காங்கிரஸுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி அமைப்புகளை உறுதிப்படுத்தவும், தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவுடன் தொடர்ந்து பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வரும் பழம்பெருச்சாளிகளை ஓரங்கட்டவும், காங்கிரஸ் தனித்து நிற்பது உதவும் என்று ஒரு புதிய விளக்கத்தை அளிக்கிறார் தில்லியிலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர். இன்னொரு திடுக்கிடும் தகவல் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் கூறப்படுகிறது. கடலோர மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் என்னென்ன என்று முதலில் கேட்டதும் ஃபேக்ஸ் மூலம் தி.மு.க. தலைமை தொகுதிகளின் பட்டியலைத் தெரிவித்ததாகவும், அதில் 50 தொகுதிகள் நிச்சயமாகத் தோல்வியை அடையும் தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது. நகர்ப்புறத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு அளித்துவிட்டு கிராமப்புறத் தொகுதிகளை தி.மு.க. தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தது என்கிறார்கள். அடுத்த வாரத்தில், மத்திய புலனாய்வுத் துறை மேலும் சில அதிர்ச்சி சோதனைகளை மேற்கொள்ள இருக்கும் நிலையில், காங்கிரஸ் பழிவாங்க முற்பட்டிருக்கிறது என்று கூறி தி.மு.க. அனுதாபம் தேடக்கூடும் என்பதால் கூட்டணியை முறித்துக் கொள்ளக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை "தளபதி' என்று குறிப்பிடும் தி.மு.க. விசுவாசிகளான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள். என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ் மேலிடம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக