வெள்ளி, 4 மார்ச், 2011

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சுமுக உடன்பாடு ?

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
அதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, சோனியாகாந்தியின் தூதராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
 
தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குலாம்நபி ஆசாத் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
 
 இரவில் சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் தங்கிய குலாம்நபி ஆசாத், நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் அதே விமானத்தில் சென்றார். டெல்லியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினரை, குலாம் நபி ஆசாத் நேற்று மாலை 5.30 மணிக்குச் சந்தித்து பேசினார்.
 
ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்திநடராஜன் எம்.பி.,, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
 
குலாம்நபி ஆசாத் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. 2 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்ததைக்குப்பின், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது- "காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், புதன்கிழமை அன்று சென்னை சென்று முதல்- அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார்.
 
இந்த பேச்சுவார்த்தையின்போது முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை மேலிட தலைவர்களிடம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக குலாம்நபி ஆசாத் நேற்று மத்தியானம் டெல்லி திரும்பினார். பின்னர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக ஐவர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
 
காங்கிரஸ் சார்பில் முதல்- அமைச்சருடன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பற்றி இந்த கூட்டத்தில் குலாம்நபி ஆசாத் விவரித்தார். தொகுதி உடன்பாடு குறித்து முதல்- அமைச்சரின் பதிலுக்காக காத்து இருக்கிறோம். அனேகமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில், தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்''.
 
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
 
இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், இது தொடர்பான அதிகாரபூர்வ உடன்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிட்டது.
 
இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. பா.ம.க.வுக்கு 31, விடுதலை சிறுத்தைகளுக்கு 10, கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால், கைவசம் இன்னும் 182 தொகுதிகள் மட்டுமே உள்ளன.
 
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மீதி 122 தொகுதிகள் மட்டுமே தி.மு.க.வின் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 129 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை: