சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 3,225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கூடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன.
வாக்குச் சாவடிகளில் 18 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். 4 நாட்களில் அவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். வாக்குப் பதிவின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது வரை நடந்த தேர்தல்களில் வாய்மொழியாக மட்டுமே பயிற்சி அளித்து வந்தோம். இந்த முறை குறும்படம் மூலம் அவர்களுக்கு விளக்கி உள்ளோம். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர் ஒருவர் தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறுவது போலவும், தேர்தல் பணியாளர் அவரை அழைத்துச் சென்று அதற்கு உரிய படிவத்தில் வாக்களிக்கச் செய்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.அதனையும் தேர்தல் பணியாளர்களுக்கு போட்டு காட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-
தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக என்னென்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். நாளை அனைத்து கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.விரைவில் இந்த கூட்டம் நடைபெறும்.
தேர்தல் பிரசாரத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொதுக் கூட்டங்கள் நடத்தும் போது கடை பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படும். 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 100 அடிக்குள் மட்டுமே அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும். பறக்கும் படையினரும், ரோந்து படையினரும் தேர்தல் பணிக்கு அமைக்கப்பட உள்ளது.
தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவத்தை கேட்டுள்ளோம். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர் தங்களது எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக