சீன தலைநகரான பெய்ஜிங்நகரில் உள்ள புகழ்பெற்ற வாங்பியூஜிங் பகுதியில் செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எதிராக புரட்சி நடந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய நாடுகளில், ஆட்சிக்கு எதிராக மக்கள் மல்லிகை புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சி தற்போது பயத்தில் தவித்து கொண்டிருக்கிறது. சீன அரசுக்கு தெரியாமல் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களை மக்கள் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பரிமாறி வந்தனர். இதை அறிந்த சீன அரசு இதுபோன்ற இணையதளங்களை முடக்கி வைத்தது.
இந்நிலையில், சீன அரசு தற்போது செய்தி சேகரிப்புக்கும் தடை விதித்துள்ளது. பெய்ஜிங் நகரின் ஷாப்பிங்கிற்கு புகழ்பெற்றது வாங்பியூஜிங். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி சேகரிக்க வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். இவர்களை போலீசார் அடித்து விரட்டியதுடன் சில வெளிநாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்தினர்.
இச்சம்பவத்தை அடுத்து வாங்பியூஜிங் பகுதியில் செய்தி சேகரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 2000வது ஆண்டில் இருந்து நடைமுறையில் இருப்பதாகவும், 2011, ஜனவரி 1ம் தேதி முதல் எழுத்துபூர்வமாக சட்டமாக்கப்பட்டது என, சீன அரசு தற்போது தெரிவித்துள்ளது. இங்கு செய்தி சேகரிக்க அனுமதி பெற வேண்டும் என, வாங்பியூஜிங் மேலாண்மை மற்றும் கட்டமைப்பு அலுவலக அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக