வியாழன், 3 மார்ச், 2011

தேர்தல் தேதி: கருணாநிதி அதிருப்தி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி குறித்து முதல்வர் கருணாநிதி   அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்று ஆணையத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 17 நாட்கள்தான் உள்ளன. வாக்குகளை அளித்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இடைவெளி. தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்படி. மேற்கு வங்கத்தில் ஆறு கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு அந்த மாநிலத்திலே வாக்குகளை எண்ணும்போது இங்கேயும் எண்ணப்பட வேண்டுமாம். அது தேர்தல் விதிமுறை.ஆனால், எதற்காக ஒரு மாத காலம் இடைவெளிவிட்டு, அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே அனைவரையும் சிரமத்துக்கு ஆளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். என்ன காரணமோ தெரியாது.தேர்தல் ஆணையம் மாநில அரசுகளை கலந்து கொண்டுதானே தேர்தல் தேதியை அறிவித்திருக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படி அல்ல. ஏனென்றால் தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உரியதல்ல. சுதந்திரமான அமைப்பு. யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.அவசரமாக புதிய அமைச்சரவை: இப்போதுள்ள சட்டப் பேரவை முடிவுற்று, அடுத்த சட்டப் பேரவை மே 17-ம் தேதியே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால் இப்போதுள்ள சட்டப் பேரவையின் காலம் மே 16-ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, மே 17-ம் தேதிக்குள் தமிழகத்திலே புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். மே 14-ம் தேதியன்று யார் யார் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அறிவிக்கப்பட்டு-அதிலே எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாக வேண்டும்.அந்தக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, தங்கள் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அதாவது முதல் அமைச்சராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் ஆளுநரைச் சந்தித்து, ஆளுநர் அவர்களை அமைச்சரவை அமைக்கச் சொல்லிக் கேட்பார்.அதன் பின், அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு அந்த அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு புதிய சட்டப் பேரவையை மே 17-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கெல்லாம் இருக்கின்ற நாட்கள் மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள்தான். அதற்குள் இத்தனைப் பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால், முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்து இருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்து இருக்கும். எண்ணிப் பார்த்து விட்டுத்தான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்து இருக்கிறது.அவசரம் காட்டுவது ஏன்? மே 17-ம் தேதிதான் புதிய சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தேர்தல் தேதியை அறிவித்து இருக்கலாம் அல்லவா?ஏப்ரல் 13-ம் தேதியே அவசர அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?சட்ட மேலவை அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னிச்சையாக எழுந்து தமிழகத்திலே சட்ட மேலவை தேர்தல் நடத்துவதைப் பற்றிக் கேட்டு பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடத்தலாம் என்று நீதிபதி சொல்லக்கூடிய அளவுக்குச் செய்து இருக்கிறார். தேர்தல் ஆணையம் அவ்வாறு அந்த வழக்கறிஞரை கேள்வி எழுப்பக் கூறியதா? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: