செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வெளியூர்களில் 6 மணி நேரமாக குறைகிறது: சென்னையில் 3 மணி நேரம் மின்சார வெட்டு;விரைவில் அறிவிப்பு வெளியாகும்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலையை சமாளிப்பதற்கான பல்வேறு திட்ட பரிந்துரைகளை மின் வாரியம் தயாரித்தது. அந்த பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது.

சென்னையில் தற்போது உள்ள ஒரு மணி நேர மின்வெட்டை உயர்த்தவும், பிற மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்வெட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மின்வெட்டை குறைத்து பாதிப்பு இல்லாமல் பொது மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எவ்வாறு மின் பகிர்மானம் செய்வது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள்.

வெளி மாவட்டங்களில் மின்வெட்டு 8 மணி நேரமாக இருப்பதை குறைப்பதற்காக சென்னையில் 3 மணி நேரமாக மின்வெட்டை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 2 மணி நேரமும் இரவு 10 மணிக்கு மேல் ஒரு மணி நேரமும் வெளி மாவட்டங்களில் மின் வெட்டு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்வெட்டை 6 மணி நேரமாக குறைக்க முடியும் என வாரியம் நம்புகிறது. பகலில் 4 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் ஒரு மணி நேரமும் மின்வெட்டு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர கூடுதலாக ஒருநாள் மின் விடுமுறை விடுவது எனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் 20 சதவீத மின் விநியோகத்தை 40 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதால் அவற்றை வழங்கிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மின் வாரியம் எடுத்துள்ள இந்த முடிவுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மின் வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன் இன்று சந்தித்து ஒப்புதல் பெற உள்ளார்.

முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின் வெட்டு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும். ஓரிரு நாட்களில் மின் வெட்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: