செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறையைமீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரம், வழித்தடங்கள் ஆகியவற்றையும் தாண்டி ராகுலின் நிகழ்ச்சிகள் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹரி ஓம் கூறுகையில்,
"சிவராத்திரி என்பதாலும், போக்குரவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதாலும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ராகுலுக்குப் பேரணி நடத்த நண்பகல்வரை அனுமதியளிக்கப்பட்டு 20 கி.மீ. தூரமுள்ள பாதையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராகுலின் நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நீடித்தது. நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாகவும் அவர்கள் செல்லவில்லை. அதற்குப் பதிலாக 38 கி.மீ. தூரத்துக்குப் பேரணி நடத்தப்பட்டது. அதனால்,பேரணியை ஏற்பாடு செய்தவர்கள்மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, "ராகுல் நிகழ்ச்சியில் எந்த நடத்தை விதிமீறலும் நடக்கவில்லை" என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி கூறினார். "முதலமைச்சர் மாயாவதி அரசின் சார்பாக ராகுலின் நிகழ்சியைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் செய்திருக்கும் முயற்சியே இது" என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே பாகை பகுதியில் ராகுலின் பேரணி சென்றபோது, சில முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி "ராகுலே திரும்பிப் போ" என கோஷம் எழுப்பினார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக