ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஒபாமா சுற்றுப்பயணம் டெல்லியில் 2,000 போலீசார் பாதுகாப்பு!

ஒபாமா சுற்றுப்பயணம் 
 டெல்லியில் 2,000 போலீசார் பாதுகாப்புஅமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6, 7, 8, 9 ஆகிய 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லி வருகிறார். 2 நாட்கள் டெல்லியில் தங்குகிறார். பின்னர் மும்பை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். ஒபாமா சுற்றுப் பயணத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
 
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். பாதுகாப்பு தொடர்பாக டெல்லி போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் டெல்லியில் ஒபாமா செல்லும் சாலைகளின் வரை படத்தை வாங்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.
 
ஒபாமா செல்லும் சாலையின் ஒவ்வொரு பகுதியும் சல்லடை போட்டு சோதனை செய்யப்படுகிறது. சாலையின் கீழ் செல்லும் குழாய்கள் பற்றியும் அமெரிக்க அதிகாரிகள் விவரம் கேட்டு அந்த இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
ஒபாமா செல்லும் ராஜ்காட் காந்தி சமாதி, பாராளுமன்ற கட்டிடம், ஐதராபாத் ஹவுஸ், அவர் தங்கும் மவுரியா ஷெரட்டன் ஓட்டல் ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.
 
ஒபாமா பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவ படை மற்றும் அதிவிரைவு படை உள்பட 2000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 
ஒபாமா பாதுகாப்புக்கு அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் காமன்வெல்த் போட்டி பாதுகாப்புக்கு ரூ.150 கோடி செலவில் இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்டன. அவை ஒபாமா பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
 
36 இடங்களில் நவீன கண்காணிப்பு காமிராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: