அயோத்தி: அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நிர்மோகி அகாரா தெரிவித்துள்ளது.
அயோத்தி நில வழக்குகளில் முக்கியமான ஒன்று இந்த நிர்மோகி அகாரா. சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பின்படி நிர்மோகி அகாராவுக்கும் மூன்றில் ஒரு பங்கு இடம் தரப்பட வேண்டும்.
இந்த நிலையில், தீர்ப்பில் திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சுமூகத் தீர்வுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகாராவின் தலைவரான துறவி பாஸ்கர தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 30ம் தேதி நாங்கள் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம். அதேசமயம், சுமூகமான தீர்வு காணும் எங்களது முயற்சிகளும் தொடங்கும்.
அகாரா அமைப்பின் பிரதிநிதிகள், சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதிப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்வார்கள் என்றார்.
சமரசப் பேச்சில் அப்துல் கலாம்
இதற்கிடையே, சமரசப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைக்கவும் ஒரு முயற்சி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அப்துல் கலாம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை கொண்ட குழுவை அமைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளை விரிவான அளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக