சனி, 30 அக்டோபர், 2010

எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்-திருமாவளவன்!

டெல்லி: காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை.

சென்னையில் ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட பிரச்சினையில் எனக்கும் எனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற கீழ்த்தரமான, விஷமத்தனமான செயல்களில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.

இந்த பிரச்சனை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு பிரச்சினையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை விளக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன்.

ஆனால் சோனியாகாந்தி பிகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாலும், வருகிற நவம்பர் 2ம் தேதி கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாலும் 2ம் தேதிக்கு பிறகு நேரம் கேட்டு சந்திக்க இருக்கிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்தும் சிலை அவமதிப்பு பிரச்சினை குறித்து தனது கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை விளக்கவே சோனியா காந்தியை சந்திக்க உள்ளேன் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: