சனி, 30 அக்டோபர், 2010

செய்யாத குற்றத்திற்காக அயல்நாட்டுச் சிறைகளில் வாடும் தமிழர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் தமிழர்கள் செய்யாத குற்றங்களுக்காக கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து வீட்டு வேலை, ஓட்டுநர் வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை உள்ளிட்ட பணிகளுக்கு குவைத், துபாய், வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். பல லட்சம் கடன் வாங்கி பணம் கட்டியதும் ஏஜென்டுகள் இவர்களில் பலரை டூரிஸ்ட் விசா, போலி விசாக்களில் அனுப்பி விடுகின்றனர்.

இதனால் தமிழர்களை அந்நாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதையும் தாண்டி செல்லும்போது முதலாளியின் கொடுமை தாங்கமுடியாமல் ஓடிவந்தால் திருடிவிட்டதாக தொழிலாளர் மீது போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதனால் கைது செய்யப்படும் தொழிலாளர்கள் சிறையில் வாடும் நிலை உள்ளது.

சம்பளம் குறைவாக இருப்பதால் வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற பொய் வழக்குகளால் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடுகின்றனர்.

இதனால் அவர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். குவைத்தின் சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என அமைக்கப்பட்டுள்ள தனி அமைச்சகம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் தான் குவைத், துபாய் சிறைகளில் ஆண்டு கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.....

கருத்துகள் இல்லை: