வியாழன், 21 அக்டோபர், 2010

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு! 40 பயணிகள் உயிர்தப்பினர்!

சென்னை: மாநகர பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடி டிப்போவைச் சேர்ந்த மாநகர பேருந்து எம் 59' (எண் 7497) வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்கிறது, அந்த பேருந்தை நேற்று வியாசர்பாடி பகுதி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஓட்டுனர் மனோகரன் (50) ஓட்டிச் சென்றார். பேருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் காவல் நிலையத்திற்கு முன்பு காலை 11 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் திடீரென மனோகரன் மயக்கமடைந்து ஸ்டியரிங்கில் சாய்ந்தார்.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தை மோதி பெயர்த்துக் கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் ஏறி நிலையில் காவல் நிலையம் முன் உள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் ஓட்டுனர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவத்தின் போது காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அவர் மாரடைப்பில் இறந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் பதட்டத்துடன் அலறியடித்துக் கொண்டு அவசர, அவசரமாக கீழே இறங்கி ஓடினர். மின்கம்பத்தில் பஸ் மோதியதில் அருகே இருந்த டிரான்ஸ்பார்மில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து கூரையின் மீது சாய்ந்த மின்சார ஒயர் இணைப்புகளில் மின்சாரம் செல்லாததால், பேருந்தில் மின்சாரம் பாயவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் டிரைவரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கருத்துகள் இல்லை: